டில்லி

ரு தொலைக்காட்சி நிகழ்வில் இஸ்லாமியத் தலைவர் ஓவைசிக்கு பதிலடி கொடுக்க நினைத்தால் அவர் 15 நொடிகள் கூட உயிருடன் இருக்க மாட்டார் என ஆர் எஸ் எஸ் தலைவர் ராகேஷ் சின்ஹா கூறி உள்ளார்.

பிரபல செய்தித் தொலைக்காட்சியான நியூஸ் 24 ல் ஒரு கலந்துரையாடல் நிகழ்ந்தது.  இந்த நிகழ்வில் உத்திரப் பிரதேச மாநிலம் காச்கஞ்ச் என்னும் பகுதியில் குடியரசு தினத்தன்று இந்துத்வா அமைப்பை சேர்ந்த ஒரு இளைஞர் கொல்லப்பட்டது குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஆர் எஸ் எஸ் சார்பில் ராகேஷ் சின்ஹா கலந்துக் கொண்டார்.    அந்த நிகழ்வில் இஸ்லாமிய அமைப்புத் தலைவரான அக்பருத்தின் ஓவைசியின் ஆதரவாளர் ஆசிம் வகார் கலந்துக் கொண்டார்.   மற்றும் பல பிரமுகர்களும் கலந்துக் கொண்டனர்.

அக்பருத்தின் ஓவைசி

ராகேஷ் சின்ஹா, “நான் ஆசிம் வகாரிடம் ஒன்று சொல்லிக் கொள்கிறேன்.   அவருடைய தலைவர் ஓவைசி காவல்துறை 15 நிமிடம் ஒதுங்கிக் கொண்டால் இந்துக்களை முழுவதுமாக அழித்து விடுவேன் எனக் கூறி உள்ளார்.   நாங்கள் அதற்கு பதிலடி கொடுக்க நினைத்தால் அவர் 15 நொடிகள் கூட உயிருடன் இருக்க மாட்டார்”  எனத் தெரிவித்தார்.

இதற்கு இந்த கலந்துரையாடலின் நெறியாளர் மானக் குப்தா கடும் கண்டனம் தெரிவித்தார்.   அதே போல ஆசிம் வகாரும் கடுமையாக எதிர்த்தார்.  அவர், “இந்திய இஸ்லாமியர்களை 15 நொடிகளில் கொல்லப் போவதாக சின்ஹா தெரிவித்துள்ளார்.  இது மிகவும் கண்டிக்கத்தக்கது”  எனக் கூறினார்.

அதற்கு சின்ஹா, “நான் கொலை செய்வதைப் பற்றி சொல்லவில்லை. ஓவைசி கூறியதற்கு பதில் செய்தியை அளித்துள்ளேன்.   முழுக்க முழுக்க ஓவைசியின் குழுவினருக்கு மட்டுமே இந்த செய்தியை அளித்துள்ளேன்.    எந்த ஒரு இந்திய இஸ்லாமியரையும் நான் குறிப்பிடவில்லை”  எனக் கூறி உள்ளார்.

ஓவைசியின் இந்த  இந்தக் கருத்துக்காக கடந்த 2015ஆம் வருடம் சிறை தண்டனை அடைந்தது குறிப்பிடத் தக்கது;.