புதுடெல்லி: சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தின்போது, வடகிழக்கு டெல்லியில் முஸ்லீம்களுக்கு எதிராக இந்துத்துவ சக்திகளால் நடத்தப்பட்ட கலவரத்தில், ஒரு கொலை வழக்கில் ஆர்எஸ்எஸ் இயக்க உறுப்பினர்கள் பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அக்கலவரத்தில் தன் தந்தையைப் பறிகொடுத்த சஹீல் பர்வேஸ் என்ற நபர் கொடுத்துள்ள விரிவான புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

“எனது சக்தியை எல்லாம் திரட்டி இந்தப் புகாரை அளிக்கிறேன். எனவே, குற்றவாளிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் மற்றும் எனக்கும் எனது குடும்பத்திற்கும் தகுந்த பாதுகாப்பு தரப்பட வேண்டும்” என்று கடந்த மார்ச் 19ம் தேதி, டெல்லியின் இடாக் நிவாரண முகாமிலிருந்து புகாரளிக்கும்போது தெரிவித்தார் பர்வேஸ்.

அவரின் தந்தை கடந்த பிப்ரவரி 25ம் தேதி கொல்லப்பட்டார். அப்போது பதியப்பட்ட புகார் வலுவானதாக இல்லை மற்றும் பல முக்கிய குற்றப்பிரிவுகள் அதில் சேர்க்கப்படவில்லை. இந்நிலையில், இந்த விரிவான நடவடிக்கைக்குப் பிறகு தேவையான அனைத்து குற்றப்பிரிவுகளும் அந்தப் புகாரோடு சேர்க்கப்பட்டுள்ளன.

இந்தப் புகாரின்படி, 20 நபர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, 16 நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்கள் டெல்லியின் வடக்கு கோண்டா பகுதியைச் சேர்ந்தவர்கள். அவர்களில் பலர் ஆர்எஸ்எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள்.

அதேசமயம், இதுதொடர்பாக ஆர்எஸ்எஸ் தரப்பை தொடர்புகொண்டபோது, தங்களுடைய இயக்கம் வேண்டுமென்றே குறிவைக்கப்படுவதாகவும், டெல்லி கலவரத்தில் தங்களுடைய இயக்கத்திற்கு எவ்வித தொடர்பும் இல்லை என்று காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் அந்த இயக்கம் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

 

நன்றி: The Quint