கான்பூர்

பாஜக அரசுக்கு ஆர் எஸ் எஸ் ஆலோசனை வழங்க உள்ளதாக மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனித்து 302 தொகுதிகளில் வெற்றி பெற்று தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆட்சி அமைத்துள்ளது.   பிரதமராக மோடி மீண்டும் பதவி ஏற்றுள்ளார்.  பாஜகவின் தாய் அமைப்பு என கூறப்படும் ஆர் எஸ் எஸ் இயக்க தொண்டர்கள் கூட்டம் நேற்று கான்பூரில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துக் கொண்டு உரையாற்றினார்.  அவர் தனது உரையில், “தொண்டர்கள் மற்றவர்களுக்கு எவ்வித உதவி அளித்தாலும் நன்மை புரிந்தாலும் தங்கள் பிடிவாதத்தை திணிக்கக் கூடாது.   சமூக சமத்துவம்,  கல்வி அறிவை வளர்த்தல், மது மற்றும் போதைக்கு அடிமையாவதை எதிர்த்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு அதிகாரம் அதிக அளவில் கிடைக்கும்.   ஆனால் அதை தவறாக பயன்படுத்தக் கூடாது.  எப்போதாவது அரசு முடிவெடுக்க தடுமாறும் போது ஆர் எஸ் எஸ் தனது ஆலோசனையை அரசுக்கு அளிக்கும்” என தெரிவித்துள்ளார்.