ரிசர்வ் வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் : ஆன்லைன் பரிவர்த்தனை பாதிப்பு
டில்லி
ரிசர்வ் வங்கி ஊழியர்களின் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தத்தினால் ஆன்லைன் பரிவர்த்தனைகள் பாதிப்படைந்துள்ளன.
ரிசர்வ் வங்கி ஊழியர் சங்கம் மற்றும் அலுவலர் சங்கம் இரண்டும் இணைந்து இன்றும் நாளையும் வேலை நிறுத்தம் செய்துள்ளனர். ஓய்வூதியம் மற்றும் வைப்பு நிதி குறித்த கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளனர். இதனால் ரிசர்வ் வங்கியின் பணிகள் முழுவதுமாக முடங்கி உள்ளது.
இதனால் ஏடிஎம் பணிகள் தடைபடாது எனவும் காசோலை பரிமாற்றங்களுக்கு பாதிப்பு ஏற்படாதுஎனவும் மற்ற வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயினும் ஆர் டி ஜி எஸ் மற்றும் நெஃப்ட் ஆகிய ஆன்லைன் பரிவர்த்தனைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பாதிப்பு தேசிய வங்கிகளை விட தனியார் வங்கிகளில் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் படேல் இந்த விடுமுறையை ரத்து செய்து விட்டு பணிக்கு வருமாறு நேற்று கோரிக்கை விடுத்தார். அதை ஊழியர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.