டில்லி

த்திய அரசு கொண்டு வந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்த மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த 2005 ஆம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் பொதுமக்கள் பொது மக்களுக்கு தகவல்களைக் கேட்டு அறியும் உரிமை அளிக்கப்பட்டது. மத்திய அரசு இந்த சட்டத்தில் ஒரு சில திருத்தம் கொண்டு வர முடிவு செய்தது. அந்த திருத்தத்தில் மத்திய தகவல் ஆணையரின் பதவிக்காலம், ஊதியம் உள்ளிட்டவற்றை மாற்றத் திட்டமிட்டது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்த மசோதாவில் ”தகவல் ஆணையம் என்பது தேர்தல் ஆணையம் போல் ஒரு தனித்து இயங்கும் துறை ஆகும். இந்த ஆணையத்தை உச்சநீதிமன்றம் கட்டுப்படுத்த முடியாது எனவும் ஆனால் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடரலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த ஆணையத்தின் அதிகாரம் குறித்து இந்த மசோதா ஒரு தெளிவை அளிக்கும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் தக்கல் செய்யப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தகவல் அறியும் சட்டத்தின் முக்கிய நோக்கத்தை இந்த மசோதா அழிக்கும் வகையில் உள்ளதாக உறுப்பினர்கள் குற்றம் சாட்டினர். காங்கிரஸ் மூத்த தலைவர் சசி தரூர் இந்த மசோதா ஜனநாயகத்தின் மீது விழுந்த பலத்த அடி எனக் குறிப்பிட்டர்.

இந்த மசோதா நேற்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவின்படி தகவல் ஆணையரின் பதவிக் காலம், ஊதியம் உள்ளிட்டவற்றை மத்திய அரசு முடிவு செய்யும் என உள்ளது. இந்த மசோதா மாநிலங்களவையில் அளிக்கப்பட உள்ளது. ஆனால் ஆளும் கட்சியான பாஜகவுக்கு மாநிலங்களவையில் போதிய பலம் இல்லாததால் இந்த மசோதா நிறைவேறுவது எளிதல்ல எனக் கூறப்படுகிறது.