மும்பையைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச்சட்ட ஆர்வலரும், நில ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக தீரமாக போராடியவருமான பூபேந்திர விரா நேற்று அவரது இல்லத்தில் டிவி பார்த்துக் கொண்டிருந்த போது திடீரென வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவருக்கு வயது 72.

bhupendravira

பூபேந்திர விரா “வாய்ஸ் ஆஃப் கலீனா” என்ற அமைப்பை ஏற்படுத்தி கலீனா என்ற பகுதியில் அரசியல்வாதிகளால் நடைபெற்ற பல்வேறு நில ஆக்கிரமிப்புகளையும் மோசடிகளையும் தட்டிக் கேட்டுவந்தார். இவர் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தை பயன்படுத்தி பல உண்மைகளை வெளிக்கொணர்ந்தபடியால் உள்ளூர் அரசியல்வாதிகளின் கோபத்துக்கு ஆளானார்.
சம்பவத்தன்று இரவு அவர் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். சுட்டவன் துப்பாக்கியில் சைலன்ஸர் பொருத்தியிருந்தமையால் வீட்டுக்குள் வேலையாக இருந்த அவரது மனைவியால் நடந்த அசம்பாவிதத்தை உணர முடியவில்லை.
பூபேந்திர விராவின் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி காங்கிரஸைச் சேர்ந்த நகராட்சி முன்னாள் உறுப்பினர் ரஸாக் கான் (78), அவரது மகன் அம்ஜத் கான் (53) ஆகிய இருவரை கைது செய்தனர். நில ஆக்கிரமிப்புக்கு எதிரான பூபேந்திர விராவின் போராட்டம் ரஸாக் கானுக்கு இடையூறாக இருந்தபடியால் அவர் கூலிப்படையை ஏவி பூபேந்திர விராவை சுட்டுக் கொன்றதாகத் தெரிகிறது.