மோசடி புள்ளிகள் பட்டியலை மோடிக்கு ரகுராம்ராஜன் அனுப்பியது உண்மையே: ஆர்.டி.ஐ. அம்பலம்

மோசடியில் ஈடுபட்ட முக்கியப் புள்ளிகளின் பட்டியலை   ரிசர்வ் வங்கி   முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன், பிரதமர் மோடி அலுவலகத்துக்கு அனுப்பியதைத் தற்போது ஆர்.டி.ஐ உறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக ரகுராம் ராஜன் பொறுப்புவகித்தபோது, நாடாளுமன்றக் குழுவுக்கு அறிக்கை ஒன்றை அளித்தார். அதில்தான் ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தபோதே பண மோசடியில் ஈடுபட்ட முக்கியப் புள்ளிகளின் பெயர்ப் பட்டியலை பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியதாக குறிப்பிட்டிருந்தார். இதில், ரகுராம் ராஜன் பிரதமர் அலுவலகம் என மட்டுமே குறிப்பிட்டிருந்தார். முன்னாள் பிரதமரா, தற்போதைய பிரதமரா என்று அதில் குறிப்பிடப்படவில்லை என்று விமர்சனம் எழுந்தது.

இதில் உண்மையில் நடந்தது என்ன என்பதை அறிந்துகொள்ள, ஆங்கில செய்தி ஊடகமான ‘தி வயர்’ (The Wire) தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு ஒன்றைத் தாக்கல்செய்தது. இதற்கு கிடைத்த பதிலில்  ரகுராம் ராஜன் மோசடிப் புள்ளிகளின் பட்டியலை பிரதமர் மோடி அலுவலகத்துக்கு அனுப்பினார் என்பது  அம்பலமாகியிருக்கிறது.   2015-ம் ஆவருடம் பிப்ரவரி 4-ம் தேதி, ரகுராம் ராஜன் பிரதமர் மோடி அலுவலகத்துக்கு இந்தக் கடிதத்தை அனுப்பியிருக்கிறார் என்றும்.  அதே கடிதம் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி அலுவலகத்துக்கும் அனுப்பட்டது என்றும்  தெரியவந்துள்ளது. அவர் அனுப்பிய பட்டியலில் உள்ளவர்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ரகுராம் ராஜன் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

“இதிலிருந்து மோசடி பேர்வழிகள் குறித்து தெரிந்தே மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை” என்ற விமர்சனம் எழுந்துள்ளது.