புதுச்சேரி,

புதுச்சேரியில் ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்ட பள்ளி மாணவர்கள் 50 பேர் மயக்கம் அடைந்தனர். இதன் காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
புதுவை அரசின் சுகாதாரத்துறை சார்பில் 9 மாத குழந்தை முதல் 15 வயது வரையிலான மாண வர்களுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடப்படுகிறது. இதையடுத்து புதுவையில் உள்ள  அரியூர் இந்தோச்சா அரசு உதவி பெறும் பள்ளியிலும் மாணவர்களுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டது.

அப்போது சில மாணவர்களுக்கு மயக்கம் மற்றும் தலைவலி ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட 24 மாணவர்கள் உடனடியாக அரியூர் ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

இதில் 15 மாணவர்கள் அரசு மருத்துவமனைக்கு மேல் சிசிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே முதலியார்பேட்டை, ஒதியஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் தடுப்பூசி போட்ட மாணவர்களும் பாதிக்கப்பட்டனர்.

இவர்களும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.
மொத்தமாக 50 மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. 42 மாணவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

மீதமுள்ள 8 மாணவர்கள் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.

மாணவர்களுக்கு திடீர் மயக்கம், தலை சுற்றல் ஏற்பட்டது பெற்றோர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதன் காரணமாக பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

சில மாணவர்களுக்கு ஒவ்வாமையால் சிறு பிரச்சினை ஏற்பட்டுள்ளது.  இதில் பயப்படும்படி ஏதும் இல்லை. தடுப்பூசியால் எந்த கெடுதியும் இல்லை என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.