‘அரசியல் அழுத்தம்’: தனி சட்டம் இயற்றம் அதிகாரம் வேண்டும்! தேர்தல் ஆணையம்

டில்லி:

ரு வேட்பாளர் 2 தொகுதியில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கில்,  அரசியல் அழுத்தம் காரணமாக சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என்றும், தங்களுக்கு தனி சட்டம் இயற்ற அதிகாரம் வேண்டும்  என்றும்  இந்திய தேர்தல் ஆணையம் உச்சநீதி மன்றத்தில்  தெரிவித்துள்ளது.

தேர்தலில் ஒரு வேட்பாளர் ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் போட்டியிடுவதை தடுக்கக் கோரி அஸ்வினி உபாத்யாயா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின்போது,  தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரம்மான பத்திரத்தில், ஒரு வேட்பாளர், இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறும்போது, ஒரு தொகுதியில், மறுதேர்தல் நடத்த வேண்டியுள்ளது; இதனால், ஆணையத்துக்கு வீண் செலவு ஏற்படுகிறது; எனவே, ஒரு வேட்பாளர், ஒரே நேரத்தில், ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும் என்றும், அப்படி ஒரு தொகுதியில் ராஜினாமா செய்தால் தேர்தல் செலவை வேட்பாளரே ஏற்க செய்ய வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

ஏற்கனவே 2004ம் ஆண்டிலேயே தேர்தல் ஆணையம் மத்திய அரசுக்குப் பரிந்துரைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், தங்களுக்கு ஏற்படும் அரசியல் அழுத்தத்தில் இருந்த விடு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக புதிய சட்டம் இயற்ற தங்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும், தேர்தல் ஆணை யத்துக்கு தனி செயலகம் அமைக்க வேண்டும் என்றும் அதன் செலவுகளை மத்திய அரசு ஏற்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

அதேபோல், தலைமை தேர்தல் ஆணையரைப் போல் அதற்கு அடுத்தாற்போல் உள்ள தேர்தல் ஆணையர்களை யும் உச்ச நீதிமன்றத்தால் மட்டுமே நீக்க முடியும் என்பது போன்று அரசியலமைப்பு சட்டத்தை திருத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முக்கிய தலைவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறும் நோக்கில், இந்த பரிந்துரை அமல்படுத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே உச்சநீதி மன்ற நீதிபதி செல்லமேஸ்வர் மற்றும் குரியன் ஜோசப் போன்றவர்கள் நீதித்துறையில் மத்திய அரசு தலையிடுவதாக கூறி உள்ள நிலையில், தற்போது நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்றி வரும்  தேர்தல் ஆணையமும் சுதந்ததிரமாக செயல்படவில்லை என்று கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.