சென்னை,

மிழக சட்டமன்றத்தில் இன்று மீனவர் பிரச்சினை குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து, அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏ அன்பழகன் அமளியில் ஈடுபட்டார். அதைத்தொடர்ந்து அவரை ஒருநாள் சஸ்பெண்ட் செய்து,  அவரை வெளியேற்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உத்தரவிட்டார்.

மேலும், திமுக தலைவர் கருணாநிதி குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறியதை திமுகவினர் நீக்கக்கோரியதை துணை சபாநாயகர் மறுத்துவிட்டதை தொடர்ந்து  திமுகவினர் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

சட்டமன்ற விவாதத்தின்போது பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,   இலங்கை வசம் இருந்த 357 படகுகள் அதிமுக ஆட்சியில்தான் மீட்கப்பட்டது, மீனவர் பிரச்சனையை தீர்க்க முதலமைச்சர் இடைப்பாடி பழனிசாமி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் மேலும், மீனவர்கள் கைது விவகாரம் தொடர்பாகவும் திமுக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் கூறியிருந்தார்.

தமிழக மீனவர்களுக்காக திமுக இதுவரை என்ன செய்துள்ளது என்றும் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் இருந்தது திமுக ஆட்சியில்தான் என்றும்  தமிழக மீனவர்கள் பேராசை பிடித்தவர்கள் என்று திமுக தலைவர் கூறியதாக ஜெயக்குமார் தெரிவித்தார்.

மேலும் திமுக ஆட்சியின்போது ஒரு படகுகூட மீட்கப்படவில்லை என்றும்  கூறினார்.

இதற்கு திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன், மீனவர் விவகாரத்தில் திமுக பற்றி ஜெயக்குமார் கூறிய கருத்தை நீக்கக்கோரி அமளியில் ஈடுபட்டார். இது குறித்து பேச திமுகவினர் வாய்ப்பு கேட்டனர். ஆனால், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

இதனைக் கண்டித்து திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.

 

பின்னர், சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன்,

அமைச்சர் ஜெயக்குமார் கூறிய குற்றச்சாட்டுக்கு தி.மு.க ஆட்சியில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த கே.பி.பி.சாமியை பதிலளிக்க முயற்சி செய்தார். ஆனால், அதற்கு துணை சபாநாயகர் அனுமதிக்கவில்லை என்றார்.

மேலும், சட்டப்பேரவையிலிருந்து எதிர்க்கட்சியினரை  வெளிநடப்பு செய்யத் தூண்டும் வகையில் ஆளுங்கட்சியினர் தொடர்ந்து செயல்படுகின்றனர்.

மீனவர் பிரச்னை தொடர்பாக தி.மு.க. மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வலியுறுத்தினோம். ஆனால் நீக்கவில்லை.

தி.மு.க. தரப்பில் பதில் தெரிவிக்க பேரவையில் அனுமதிக்கப்படவில்லை. எங்கள் தரப்பு கருத்துகளைத் தெரிவித்துவிட்டு, மீண்டும் சட்டப்பேரவைக்குச் செல்கிறோம்” என்று கூறினார்.