ஆளுங்கட்சி வரவேற்பு வளைவால் வாலிபர் பலி! கொந்தளித்த மக்கள்! வளைவுகளை அகற்றிய மாநகராட்சி!

--

கோவை:

கோவை – அவிநாசி சாலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக ஆளுங்கட்சியினர் வைத்திருந்த பேனரால் ஏற்பட்ட உயிர்ப் பலியைத் தொடர்ந்து, மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, மாநகராட்சி அதிகாரிகள் அலங்கார வளைவுகளை அகற்றினர்

கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடக்கிறது. இதற்காக  அவிநாசி சாலையில் உள்ள மருத்துவக் கல்லூரி அருகே  சாலையை மறித்து அலங்கார வளைவுகள் வைக்கும் பணிகளை ஆளும்கட்சியினர் செய்து வந்தனர். இந்த பணிகள்,  விமான நிலையம் முதல் வ.உ.சி பூங்கா மைதானம் வரை 9 கி.மீ தொலைவுக்கு நடந்தன.

ரகு

இதனால் அவிநாசி சாலையில் மாலையில் சாலைப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மக்கள் பெரும்   அவதிக்கு  ஆளானார்கள். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆளுங்கட்சியினர் தங்கள் பணியினைத் தொடர்ந்தனர்.

அலங்கார வளைவுகளுக்காகக் கட்டிய மூங்கில் கம்புகள் வெளியே நீட்டியபடி இருந்தது. இந்த நிலையில்  அவ்வழியே சென்ற ரங்கசாமி கவுண்டன் புதூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ரகு என்பவர் அந்தக் கம்புகளில் மோதி விழுந்து பலியானார்.

பிணமாக..

வெளிநாட்டிலிருந்து திருமணத்துக்காகப் பெண் பார்க்க சொந்த ஊர் வந்திருந்தார் ரகு.  அவரது மரணத்தால் மக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், அலங்கார வளைவுகள் வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தனர்.   இதையடுத்து இன்று முதன்முறையாக ஆளுங்கட்சியினர் வைத்த ஆர்ச் பேனர்களை கோவை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றத் துவங்கினர்.

அதே நேரம் நேற்று இரவு நடந்த சாலை விபத்து குறித்து வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என்று மக்கள் ஆதங்கம் தெரிவித்து வருகிறார்கள்.