ஆட்சியில் உள்ளவர்கள் மக்கள் குரலை கேட்க வேண்டும் : ஆர் எஸ் எஸ் தலைவர் தாக்கு

டில்லி

ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் ஆட்சியில் உள்ளவர்கள் மக்கள் குரலை கேட்க வேண்டும் என ஆர் எஸ் எஸ் தலைவர் கூறி உள்ளார்.

அயோத்தி நகரில் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் அமைப்பதாக வாக்குறுதி அளித்து கடந்த 2014 ஆம் வருடம் பாஜக ஆட்சியை பிடித்தது.    இந்த வழக்கு உச்சநீதிமன்ற நிலுவையில் உள்ளதால் மத்திய மாநில அரசுகளால் எதுவும் செய்ய இயலாத நிலையில் உள்ளன.   இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையை அடுத்த வருடத்துக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது.

இந்த ஒத்திவைப்பு இந்து மத அமைப்புக்களிடையே கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.   தற்போது மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை உள்ளதால் உடனடியாக ராமர் கோவில் கட்ட அவசர சட்டம்  பிறப்பிக்க அமைப்புக்கள் வற்புறுத்தி வருகின்றன.   இந்நிலையில் டில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் விஸ்வ இந்து பரிஷத் ஒரு பேரணியை நடத்தியது.

இந்த பேரணியில் பேசிய ஆர் எஸ் எஸ் தலைவர் பையாஜி ஜோஷி பாஜக என பெயர் சொல்லாமல் வன்மையாக தாக்கி உள்ளார்.   அவர், “தற்போது ராமர் கோவில் கட்டி தருவதாக வாக்களித்தர்வர்கள் ஆட்சியில் உள்ள்னர்.   அவர்கள் மக்களின் குரலை கேட்டு அவர்கள் நீண்ட நாள் விருப்பமான ராமர் கோவில் அமைப்பை நடத்திக் கொடுக்க வேண்டும்.

நாங்கள் கோவில் வேண்டும் என பிச்சை எடுக்கவில்லை.   நாங்கள் எங்கள் உணர்வுகளை தெரிவிக்கிறோம்.    இந்த நாட்டுக்கு ராம ராஜ்யம் தேவை.    சட்டத்துக்கு விரோதமாக நடக்கும் அரசு முன்னேற்ற பாதையில் செல்ல முடியாது.   ஆனால் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு நடக்க வேண்டும்.

அதே நேரத்தில் நாங்கள் எந்த சமுதாயத்தினரிடையேயும் சர்ச்சையை உண்டாக்கவில்லை.   எங்களது உணர்வுகளை காட்டி பிச்சை எடுக்கவில்லை.  ராமர் கோவில் அமைக்க ஒரு புதிய சட்டம் இயற்றுவதால் மட்டுமே உங்கள் வாக்குறுதி நிறைவேறும் என தெரிவிக்கிறோம். ” என கூறி உள்ளார்.

அரித்வாரை சேர்ந்த சாமி ஹன்ஸ்தேவாசாரியா, “பிரதமர் மோடி ராமர் கோவிலை கட்டும் வரை நாங்கள் அவரை விட மாட்டோம்.   வாக்குற்தியை நிறைவேற்ற வேண்டியது அவருடைய கடமை ஆகும்.   அந்த கடமையை முடிக்காமல் அவர் பதவியை விட்டு செல்ல நாங்கள் அனுமதிக்க மாட்டோம் ” என இந்த பேரணியில் உரை ஆற்றி உள்ளார்.