மாநில பாஜக தலைவர் எச்.ராஜா, எஸ்.வி.சேகர் என வதந்திகள் வைரல்! 5 மாதமாக தலைவரை நியமிக்க முடியாமல் தடுமாறும் பாஜக!

டந்த ஆண்டு ஆகஸ்டு மாத இறுதியில் தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை  தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதால், தமிழக பாஜக தலைவர் பதவி காலியாக உள்ளது.  கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கட்சித் தலைவர் பதவி காலியாக உள்ளதால், பாஜக தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதற்கிடையில், கட்சி தலைமை பொறுப்பை கைப்பற்ற எஸ்.வி.சேகர், எச்.ராஜா, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம் ஆகியோர்  இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.

இதைத்தொடர்ந்து கடந்த 5ந்தேதி மேலிட பிரதிநிதிகள் தமிழக பாஜக நிர்வாகிகளுடன் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி, கருத்துக் களை கேட்டனர்.  தமிழக பாஜக தலைவர்களுடன் நடத்திய ஆலோசனையில் தமிழக பாஜக தலைவர் தேர்வு செய்யப்பட்டுவிட்டார் என்று கூறப்பட்டது.  போட்டியின்றி முக்கியமான நபர் ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெல்லி தலைமை இதற்கு ஒப்புதல் அளித்துவிட்டதாகவும்,  மாநில தலைவர் யார் என்பது குறித்த அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்தவித அறிவிப்பும் மத்திய தலைமையிடம் இருந்து வெளியாக வில்லை…

மத்தியில் ஆளும் கட்சியாகவும், தேசிய கட்சியாகவும் உள்ள ஒரு கட்சி, மாநில தலைவர் ஒருவரை நியமிக்க முடியாமல் தடுமாறுவது தமிழக பாஜகவினரிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.. எந்தவொரு கட்சியிலும் இதுபோன்ற நிலைமை கிடையாது என்று குமுறும் பாஜக தொண்டர்கள், 6 மாதமாக மாநிலத் தலைவர் யார் என்பதைக்கூட அறிவிக்க முடியாத நிலையில் தேசிய தலைமையும், இருக்கும் சில நிர்வாகிகளும் தங்களுக்குத்தான் தலைவர் பதவி வேண்டும் என்று ஆளாளுக்கு கொடி பிடித்து வரும் சூழலும் தமிழகத்திலும் பாஜக என்று ஒரு கட்சி இருக்கிறதா என்ற சந்தேகத்தை மக்களிடையே எழுப்பி உள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் பாஜக தலைவர்கள் கூட்டம் கடந்த இரு நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அறிவிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்,  புதுச்சேரி பாஜக தலைவராக எஸ்.சுவாமிநாதன்  நியமனம் செய்யப்பட்டு இருப்பதாக மட்டுமே அறிவிக்கப்பட்டது.

தமிழக பாஜக தலைவர் குறித்து  எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாத நிலையில், கடந்த வாரம், தமிழக பாஜக தலைவராக எஸ்.வி.சேகர் நியமிக்கப்படுவது உறுதியாகி விட்டதாகவும், அவருக்கு எச்.ராஜா வாழ்த்து கூறுவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில், நேற்று பிற்பகல் திடீரென  தமிழக பாஜக தலைவராக எச்.ராஜா நியமிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் அறிவிப்பு நோட்டீஸ் வெளியாகி வைரலானது. இதை பார்த்த பாஜக நிர்வாகிகளும், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஏற்கனவே சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுப்பதுபோல, பல்வேறு பிரச்சினைகளில் மூக்கை நுழைத்து, தேவையற்ற பிரச்சினை களை உருவாக்கி மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வரும், எச்.ராஜா பாஜக தலைவர் நியமிக்கப்பட்டு உள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாஜக தலைவர் பதவியை கைப்பற்ற, சம்பந்தப்பட்டவர்களே இதுபோன்ற தகவலைகளை பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, பாஜக மாநில அமைப்பு  செயலாளர் கேசவ விநாயகம்  ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதில், பாஜக மாநிலத்தலைவர் குறித்து பல்வேறு வதந்திகள், சித்தரிப்புகள் கடந்த சில நாட்களாக சமூக ஊடகங்களில்  பலர் தங்களது விருப்பத்திற்கேற்ப கற்பனை செய்து வெளியிட்டு வருகிறார்கள்… இவை உண்மைக்கு மாறாது.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் யார் என்று இன்னும் முடிவாகவில்லை, இதற்கு இன்னும் சில வாரங்கள் ஆகும், முடிவாகும் போது உங்களுக்கு அதிகாரப்பூர்வமாக கட்சியின் சார்பில் தகவல் தெரிவிக்கப்படும்.

ஆகையால், தவறான தகவல்களை தந்து நமக்குள்யே குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு சிலர் முயற்சிக்கிறார்கள் என்று  தெரிவித்து உள்ளார்.

இந்த பரபரப்பான சூழலில் பாஜக தேசிய செயல் தலைவராக உள்ள ஜே.பி.நட்டா வரும் 20ம் தேதி பாஜக தேசிய தலைவராக அறிவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அவர் வரும் 22ந்தேதி தேசிய தலைவராக பொறுப்பேற்ற பிறகே, தமிழக பாஜகவின் மாநில தலைவர் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி