வதந்திகளை கட்டுப்படுத்த வேண்டும்……வாட்ஸ் அப் நிறுவனத்துக்கு மத்திய அரசு எச்சரிக்கை

டில்லி:

குழந்தை கடத்தல் கும்பல் என வாட்ஸ்- அப் மூலம் பரவும் வதந்தியால் நாடு முழுவதும் அப்பாவிகள் அடித்துக் கொல்லப்படுகின்றனர். கடந்த 2 மாதங்களில் வதந்தியால் 20 பேர் உயரிழந்துள்ளனர்.

இந்நிலையில் வன்முறையை தூண்டும் விதமான செய்திகள் பரவும் விவகாரத்தில் வாட்ஸ்- அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. ‘‘பொறுப்பற்ற மற்றும் வன்முறையை தூண்டும் வகையிலான செய்திகளை தடுத்திட வேண்டும்’’ என்று உத்தரவிட்டுள்ளது.

அசாம், மராட்டியம், கர்நாடகம், திரிபுரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெற்ற கொலை சம்பவங்கள் வருத்தம் அளிக்கிறது. வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமை அதிகாரிகளிடம் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இது குறித்த வருத்ததை தெரிவித்துள்ளது.

போலியான மற்றும் உள்நோக்கம் கொண்ட மற்றும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையிலான செய்திகளை பரப்புவதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கையை வாட்ஸ்-அப் நிறுவனம் மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுரை வழங்கியுள்ளது.