ரூபாய் மதிப்பு கடந்த 6 வருடங்களில் இல்லாத அளவு மிகவும் சரிந்துள்ளது.

மும்பை

ந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 6 வருடங்களில் இல்லாத அளவுக்கு நேற்று  குறைந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே ஆன வர்த்தகப் போரினால் பல நாடுகளின் பொருளாதாரம் சரிந்து வருகிறது. வர்த்தக உலகில் பெரிய நாடான அமெரிக்காவின் டாலருக்கு நிகரான மற்ற நாடுகளின் பண மதிப்பும் குறைந்து வருகிறது. இது சர்வதேச அளவில் வர்த்தகத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறான பண மதிப்பு வீழ்ச்சிக்கு அந்தந்த நாடுகளில் உள்ள அரசியல் மற்றும் பொருளாதார நிலையும் காரணங்களாக உள்ளன.

நேற்று இந்தியாவில் காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்டதால் வர்த்தக உலகில் அதன் மாறுதல் நன்கு எதிரொலித்தது. இதனால் பல பங்குகள் விலை சரிந்தன. அத்துடன் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாகச் சரிந்தது. நேற்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ7.74 ஆக இருந்தது. இது கடந்த 6 வருடங்களில் இல்லாத அளவு மிகவும் சரிவாகும்.

இது குறித்து பிரபல பொருளாதார நிபுணர் மனோஜ் ரானே, “டாலருக்கு நிகரான  சீன நாணயமான யுவானின் மதிப்பு குறைந்து வருகிறது. இதன் தாக்கமும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு குறைவுக்கு ஒரு காரணமாகும். இதே நிலை உலகின் பல நாணயங்களுக்கு ஏற்பட்டுள்ளது. தென் கொரியா,இந்தோனேசியா, மலேசியா, உள்ளிட்ட பல நாடுகளின் பணம் மதிப்பு குறைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.