சென்னை:

வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை நீதிமன்ற பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்கக்கோரி மாநில தேர்தல் ஆணையம்  உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர்நீதி மன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

மேலும், தேர்தல் ஆணைய நடவடிக்கையில் உயர்நீதிமன்றம் தலையிடுவதை கண்டித்துள்ள உச்சநீதிமன்றம், இதுகுறித்து விளக்கம் அளிக்கவும்  சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளைக்கு உத்தரவிட்டு உள்ளது.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கை முடிந்ததும், உடனே, வீடியோ பதிவை  உயர்நீதிமன்ற பதிவாளரிடம் தாக்கல் செய்ய வேண்டும் என்றுஉத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்து , மாநில தேர்தல் ஆணையம் தரப்பில்  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த வழக்கு இன்று உச்சநீதி மன்ற தலைமைநீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி,  வாக்கு எண்ணிக்கை வீடியோ பதிவை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிற்கு தடை விதித்து உத்தரவிட்ட நிலையில், தேர்தல் ஆணையம் நடவடிக்கையும் உயர்நீதி மன்றம் தலையிடுவதற்கும் கண்டனம் தெரிவித்தது. மேலும், இது தொடர்பாக உயர்நீதி மன்றம், தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.