சிரியாவில் போர் நிறுத்தம் – கூட்டாக அறிவித்தன ரஷ்யா & துருக்கி

மாஸ்கோ: சிரியாவில் போர் நிறுத்தம் செய்வதாக ரஷ்யாவும் துருக்கியும் கூட்டாக அறிவித்துள்ளன. ஆனாலும், நீடித்த அமைதி நிலவுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
சிரியாவில் செயல்படும் புரட்சிப் படையை ஒடுக்க, சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத் தலைமையிலான அரசுப் படைகள், ரஷ்யாவின் உதவியுடன் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில், அரசுப் படைகளுக்குப் பல இடங்களில் வெற்றி கிடைத்துள்ளது.
இந்நிலையில், இட்லிப் மாகாணத்தில் புரட்சியாளர்கள் மீது சிரிய அரசுப் படைகள் நடத்திய தாக்குதலில் சிக்கிய துருக்கிய ராணுவ வீரர்கள் 33 பேர் கொல்லப்பட்டனர்.
இதனால், துருக்கி – சிரியப் படைகளுக்கு இடையே மோதல் வலுத்துள்ளது. இதில் பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், இட்லிப் பகுதியில் போர் நிறுத்தத்தை அமல்படுத்த ரஷ்ய அதிபர் புதினை துருக்கி அதிபர் எர்டோகன் வலியுறுத்தினார்.
இதனையடுத்து, இருநாட்டு அதிபர்களும் மாஸ்கோவில் சந்தித்துப் பேசினர். அப்போது, போர் நிறுத்தம் செய்வதாக கூட்டாக அறிவித்தனர். ஆனாலும், இவர்களின் இந்தக் கூட்டு அறிவிப்பின் மூலம், இருதரப்பு தாக்குதலும் சிரியாவில் நிறுத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அப்படியானதொரு உத்தரவாதம் கிடைத்தால் ஒழிய, போரினால் இடம்பெயர்ந்த மக்கள், மீண்டும் தத்தம் பகுதிகளுக்கு திரும்ப முடியாது என்ற நிலையே நீடிக்கிறது.