மாஸ்கோ: கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு உ ள்ளதாவும், எனது மகளுக்கு அந்த ஊசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்து உள்ளார்.

உலகையே இன்னமும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரசுக்கு தடுப்பூசிகள் உருவாக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுவருகின்றன. 20க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள், மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு பரிசோதனை நிலையில் இருக்கின்றன.

உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை வெற்றிகரமாக மனிதர்களிடம் பரிசோதனை செய்யப்பட்டது,  தன்னார்வலர்களை கொண்டு நடத்தப்பட்ட சோதனையில், தங்களின் தடுப்பு மருந்து பாதுகாப்பானது என தெரிய வந்ததாகவும் கடந்த மாதம் ரஷ்யா அறிவித்தது.

கொரோனா தடுப்பூசி பரிசோதனைகள் நிறைவடைந்ததாக ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சர் மிகைல் முராஷ்கோ கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.அக்டோபர் முதல் நாடு முழுவதும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் எனவும் அவர் கூறி இருந்தார்.

இந் நிலையில், கொரோனா தடுப்பு மருந்துக்கு சுகாதாரத்துறை ஒப்புதல் அளித்துள்ளதாக அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். இன்று காலை, உலகில் முதல் முறையாக, புதிய கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி ரஷ்யாவில் பதிவு செய்யப்பட்டது என்று அவர் அமைச்சர்களுடன் காணொலி வாயிலாக அறிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது: தனது மகள் தடுப்பு மருந்து எடுத்துக்கொண்டார். விரைவில் இந்த தடுப்பு மருந்து அதிகளவில் உற்பத்தி செய்து விநியோகம் செய்யப்படும் என்று கூறினார்.