மே 11ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்துள்ள ரஷ்யா!

மாஸ்கோ: கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள ரஷ்யாவில், மே மாதம் 11ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

உயரதிகாரிகளுடன், அந்நாட்டு அதிபர் புடின் மேற்கொண்ட ஆலோசனையின் முடிவில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பேசியதாவது: ரஷ்யா முழுவதும் கொரோனாவின் பரவல் இன்னும் உச்சத்தை எட்டவில்லை எனத் தெரிகிறது. ஆகவே, மே மாதம் 11ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. மார்ச் மாதம் இறுதியில் தொடங்கிய கொரோனா பாதிப்பு, ஏப்ரல் மாதம் 30ம் தேதியோடு முடிவடையும் என எதிர்பார்த்த நிலையில் கொரோனா தாக்கம் இன்னும் நீடிக்கிறது.

ஏற்கனவே அரசின் சார்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளால், முக்கிய தொழில்களில் பணிபுரிபவர்கள் தவிர பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே முடங்கியிருந்தனர். ரஷ்யாவில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 498 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பலியானவர்களின் எண்ணிக்கை 1,073 ஆனது. இந்த பாதிப்பிலிருந்து 11,619 பேர் மீண்டுள்ளனர். இந்நிலையில் மே மாதம் 11ம் தேதிக்குப் பிறகு படிப்படியாக ஊரடங்கை தளர்த்திக் கொள்ளலாம் என்று மாகாண அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றுள்ளார் புடின்.

ரஷ்யாவில், ஏப்ரல் 30ம் தேதியான நேற்று மட்டும் 7,099 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. ஒரே நாளில் பதிவான அதிகபட்ச பாதிப்பு இதுவாகும். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஆறாயிரத்து 498 ஆக உயர்ந்தது. அதேபோல் பலி எண்ணிக்கையும் 1000ஐ தாண்டியது.