ஐ எஸ் தலைவர் அல் பாக்தாதி உண்மையாகக் கொல்லப்பட்டாரா? : சந்தேகம் எழுப்பும் ரஷ்யா

 

மாஸ்கோ

எஸ் இயக்க தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி உண்மையாகவே கொல்லப்பட்டாரா என ரஷ்யா சந்தேகித்துள்ளது.

சிரியாவில் அமெரிக்கப் படை தாக்குதலில் ஐ எஸ் இயக்க தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்தன.  அதைப் பலரும் நம்ப மறுத்தனர்.  நேற்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “சிரியாவின் இட்லிப் நகரில் நடந்த அமெரிக்கப் படை தாக்குதலின் போது பதுங்கி இருந்த அல் பாக்தாதி் தனது இடுப்பில் கட்டி இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்து தற்கொலை செய்துக் கொண்டார்” எனத் தெரிவித்தார்.

இப்போதும் இதை ரஷ்யா நம்ப மறுத்துள்ளது.  அந்நாட்டின் பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், “அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்ததில் பல சந்தேகங்கள் உள்ளன.  சிரியாவில் நடக்கும் அமெரிக்க நடவடிக்கைகள் குறித்து எங்களுக்கு எவ்வித நம்பகமான தகவல்களும் கிடைக்கவில்லை.

ஐ எஸ் தலைவர் அல் பாக்தாதி  பதுங்கி இருந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ள பகுதியானது அல் கொய்தா தீவிரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  எனவே அல் பாக்தாதி உயிரிழந்ததற்கான குறைந்த பட்ச நேரடி ஆதாரங்களை அமெரிக்கா வெளியிட வேண்டும்.

ஏற்கனவே இது போல் பலமுறை அல் பாக்தாதி கொல்லப்பட்டதாக அறிவித்து அவை அனைத்தும் பொய்ச் செய்திகளாக இருந்துள்ளன.   எனவே இதையும் எங்களால் நம்ப முடியவில்லை.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி