கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ஐநாவுக்கு ரஷ்ய ஆதரவு

சுவிட்சர்லாந்து:

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் ரஷ்ய தலைமையிலான பாதுகாப்பு குழு உலக சுகாதார அமைப்பை ஆதரிக்கின்றது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் உள்ளிட்ட தொற்று நோய்களை எதிர்த்துப் போராடுவதில் உலக சுகாதார அமைப்பின் ஒருங்கிணைந்த பங்கை ஆதரிப்பதாக ரஷ்யா தலைமையிலான கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு( சிஎஸ்டிஓ) தெரிவித்துள்ளது.

ஐநாவின் கூட்டு பாதுகாப்பு அமர்வுக்கு பின்னர் தன்னுடைய அறிவிப்பில் சிஎஸ்டிஓ தெரிவித்துள்ளதாவது: பல வகையான தொற்று நோய்களை எதிர்த்து போராடுவதற்கு சிஎஸ்டிஓ உறுப்பு நாடுகள் தொற்று நோய்களைத் தடுப்பதிலும், அதனை கட்டுப்படுத்துவதிலும், அதன் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும், நிபுணர்களை பயிற்றுவிக்கவும், அவசர கண்காணிப்பு மற்றும் மறுமொழி முறைகளை மேம்படுத்தவும் விரும்புகின்றன.

அதுமட்டுமில்லாமல் இந்த அமைப்பின் உறுப்பு நாடுகளும் உலகளாவிய சுகாதார நெருக்கடிக்கு எதிரான போராட்டத்தில் பரஸ்பர ஆதரவு மற்றும் மனிதாபிமான உதவிகள் செய்வதை வரவேற்கின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழு 1992 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ரஷ்யா தலைமையிலான கூட்டணியாகும், இது யுரேசியாவில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பாதுகாக்கும் நோக்கத்துடன் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.