கொரோனா – ரஷ்யாவில் 2ம் உலகப்போர் வெற்றிதின விழா கொண்டாட்டம் ஒத்திவைப்பு!

மாஸ்கோ: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இரண்டாம் உலகப்போரில் கிடைத்த வெற்றியை நினைவுகூறும் வகையிலான, ரஷ்ய வெற்றி தின விழா கொண்டாட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார் அந்நாட்டு அதிபர் புடின்.

மே மாதம் 9ம் தேதி இந்த விழாவை கோலாகலமாக நடத்துவதற்கு அந்நாடு திட்டமிட்டிருந்தது. இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் வலிமை வாய்ந்த நாஜிப் படையை, ஸ்டாலினின் அன்றைய சோவியத் யூனியன் கடந்த 1945ம் ஆண்டு முற்றிலும் முறியடித்தது.

இதன் 75வது ஆண்டு விழாதான் மே மாதம் கொண்டாடப்படவிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் அன‍ைத்தையும் மாற்றிவிட்டது.

இந்நிலையில், கொரோனா வைரஸால் ரஷ்யாவில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு அங்கு ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த சூழ்நிலையில், ரஷ்ய பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டத்தைக் கூட்டி அதிபர் விளாடிமிர் புடின் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, வெற்றி தின விழா ஏற்பாடுகளை தற்காலிகமாக தள்ளி வைக்குமாறு உத்தரவிட்டார் அதிபர்.