ரஷ்ய அதிபராக புதின்  வெற்றி பெற்றார்.

ரஷியாவில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் (வயது 65),  போட்டியிட்டார்.  அவருக்கு எதிராக பவல் குருதினின், விளாடிமிர் ஜிரினோவ்ஸ்கை, செர்கெய் பாபுரின், கிரிகோரி யாவ்லின்ஸ்கை, போரிஸ் டிட்டோவ், கெசெனி சோப்சாக், மேக்சிம் சுராய்கின் என  ஏழு வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலுக்காக ரஷியாவில் 96 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, உள்ளூர் நேரப்படி காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. வாக்குச்சீட்டு முறையில் ஓட்டுப்பதிவு நடந்தது.

தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டன. இதில், சுமார் 76 சதவீத வாக்குகள் பெற்று புதின்  வெற்றி பெற்றார். இதன் மூலம், 20 ஆண்டுகளாக ரஷ்யாவில் அதிகாரத்தில் இருந்து வரும் புதினின் ஆதிக்கம் இன்னும் நீடிக்க இருக்கிறது.

முதற்கட்ட தேர்தல் முடிவுகள் வெளியானவுடன் தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் பேசிய புதின்,  “ கடந்த சில வருடங்களில் செய்த சாதனைகளுக்கான அங்கீகாரம் இது. மக்களின் நம்பிக்கையையும், உறுதியையும் தேர்தல் முடிவுகள் மூலம் வெளிப்பட்டிருக்கிறது” என்றார்.

புதினுக்கு அடுத்த இடத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பவல் குருதினின் 12 சதவீத வாக்குகள் பெற்றார்.

ரஷ்ய அதிபராக 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ள புதின் அடுத்த 6 ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார். ஆனால், முறைகேடு செய்து புதின் வெற்றி பெற்றுள்ளதாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.