இந்திய கங்கன்யான் விண்கல விண்வெளி வீரர்களுக்கு ரஷ்ய விண்வெளி உடை

பெங்களூரு

ந்தியாவின் கங்கன்யான் விண்கலத்தின் மூலம் விண்வெளி செல்ல உள்ள  வீரர்களுக்கு ரஷ்யாவில் இருந்து விண்வெளி உடைகள் கொள்முதல் செய்யப்பட உள்ளனர்.

இந்திய விண்வெளி ஆய்வுக் கழகமான இஸ்ரோ தற்போது ஏவிய சந்திரயான் விண்கலம் நிலவை நெருங்கி வருகிறது. இது நிலவின் தென் துருவப்பகுதியில் இதுவரை எந்த நாடும் இறங்காத பகுதியில் இறங்க உள்ளதால் உலக நாடுகள் இந்நிகழ்வைக் கூர்ந்து கவனித்து வருகின்றன. இஸ்ரோ தனது அடுத்த திட்டமான கங்கன்யான் என்னும் திட்டத்தில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த விண்கலத்தில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப இந்தியா  திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்தப் பயணத்துக்கு இந்தியாவுக்கு ரஷ்ய அரசு வழிகாட்டியாக உள்ளது. இது குறித்துக் கடந்த ஜூலை மாதம் 1 ஆம் தேதி இஸ்ரோவுக்கும் ரஷ்ய  விண்வெளி ஆராய்ச்சியகத்துக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. அதன்படி இந்திய விண்வெளி வீரர்களுக்கு ரஷ்ய அரசு பயிற்சி அளிக்க உள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்த திட்டத்துக்கு முதலில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆலோசிக்கப்பட்டு இறுதியாக ரஷ்யா தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவின் தலைநகர் மாச்கோவில் உள்ள ரஷ்ய விண்வெளி ஆராய்ச்சியகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், “இந்திய விண்வெளி வீரர்களுக்குத் தேவையான ராக்கெட் உபகரணங்கள், பாதுகாப்பு சாதனங்கள் விண்வெளி வீரர்கள் உடைகள் உள்ளிட்டவற்றை ரஷ்ய அரசாங்கத்திடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்ய உள்ளது இதற்கான ஒப்பந்தம் இந்த மாத இறுதிக்குள் கையெழுத்தாக உள்ளது.”என தெரிவிக்கப்பட்டுள்ளது.