டில்லி

டாக்டர் ரெட்டி நிறுவனம் வரும் மார்ச் மாத இறுதிக்குள் ரஷ்ய கொரோனா தடுப்பூசியான ஸ்புட்னிக் வி மருந்தை அறிமுகம் செய்ய உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டுள்ளது.  முதல் கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள், முன்கள சுகாதார பணியாளர்களுக்குத் தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது.   இந்த முதல் கட்டத்தின் இரண்டாம் பகுதியில் வயது முதிர்ந்தோருக்குத் தடுப்பூசிகள் அளிக்கப்பட உள்ளன.  இதற்கான முன் பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

இதுவரை 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு இந்திய அரசு அவசரக்கால பயன்பாட்டுக்கான அனுமதியை அளித்துள்ளது.   இவை சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிப்பான கோவிஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக் தயாரிப்பான கோவாக்சின் ஆகியவை ஆகும்.  கோவிஷீல்ட் மருந்து ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலை மற்றும் ஆஸ்டிரா ஜெனிகாவின் இணை கண்டுபிடிப்பாகும்.  கோவாக்சின் மருந்து பாரத் பயோடெக் சொந்த கண்டுபிடிப்பாகும்.

ரஷ்யாவின் கொரோனா தடுப்பு மருந்தான ஸ்புட்னிக் வி மருந்தும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.  இந்திய மருந்து நிறுவனமான டாக்டர் ரெட்டி நிறுவனம் இந்த மருந்தைத் தயாரிக்க உள்ளது. இந்த மருந்து ஏற்கனவே மூன்றாம் கட்ட சோதனையில் 70% ஆர்வலர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.   இந்த விவரங்கள் முழுமையாகக் கிடைத்த பிறகு இந்த மருந்தின்  பயன்பாட்டுக்கான அனுமதியை நிறுவனம் கோர உள்ளது.

இது குறித்து நிறுவனம், “தற்போது ஸ்புட்னிக் வி மருந்து 1500 ஆர்வலர்களுக்கு இரு டோஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன.  இரு டோஸ்களும் 21 நாட்கள் இடைவெளியில் அளிக்கப்பட்டுள்ளன.  இந்த சோதனை விவரங்கள் முழுமையாகக் கிடைத்த பிறகு நாங்கள்: அரசிடம் இந்த மருந்தைப் பயன்படுத்த அனுமதி கோர உள்ளோம்.  இந்த மருந்து மார்ச் இறுதிக்குள் அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளது” என அறிவித்துள்ளது.