வடகொரியா, சீனாவின் அண்டை நாடான இங்கு என்ன நடக்கிறது என்பது அதன் நட்பு நாடான சீனாவுக்கு கூட அதிகமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சீனாவில் கண்டறியப்பட்டு, உலகம் முழுவதும் கொரோனா கோரத்தாண்டவம் ஆடியபோதும் இங்கு ஒரு உயிர் கூட கொரோனாவால் பலியாகவில்லை என்றும் ஒருவருக்கு கூட கொரோனா தொற்று இல்லை என்றும் பீத்திக்கொள்கிறது வடகொரியா.

கடந்த ஒராண்டாக இங்குள்ள தூதரகங்கள், சுழற்சி முறையில் அதிகாரிகளை மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளுக்கு தடைபோட்டுள்ளது வடகொரியா.

இதன் காரணமாக மேற்கத்திய நாடுகளின் தூதரக அதிகாரிகள் இங்குள்ள தூதரக அலுவலகங்களை மூடிவிட்டு பறந்தனர்.

இங்கிருந்து வெளியேற துடிக்கும் அதிகாரிகள் வடகொரியா விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு சிறப்பு ஏற்பாடுகள் மூலம் தப்பித்தோம் பிழைத்தோம் என்று வந்து சேர்ந்தனர்.

அதுபோல், ரஷ்யாவை சேர்ந்த தூதரக அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் என்று மொத்தம் எட்டு பேர் கடந்த ஓராண்டாக வடகொரியாவில் சிக்கித்தவித்தனர்.

இந்நிலையில் இருதினங்களுக்கு முன் அவர்கள் வடகொரிய எல்லையை கடந்து ரஷ்யாவை வந்தடைந்தனர்.

மூன்று வயது குழந்தை உள்ளிட்ட குழுவுடன் வந்த அந்த அதிகாரிகள், வடகொரிய தலைநகரில் இருந்து ரஷ்யா வந்து சேர தாங்கள் அனுபவித்த வேதனையை பகிர்ந்தனர்.

32 மணி நேர ரயில் பயணம் பின் 2 மணி நேர பேருந்து பயணம் முடிந்து கடைசி ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் தண்டவாளத்தின் மீது செல்லும் தள்ளுவண்டியை கைகளால் தள்ளிக் கொண்டு தங்கள் மூட்டை முடிச்சுகளுடன் வந்து சேர்ந்ததாக தெரிவித்தனர்.

பனிபொழிவான நாட்களில் வழுக்கும் ரயில் பாதையில் வடகொரிய – ரஷ்ய எல்லையில் அமைந்திருந்த துமென் ஆற்றுப்பாலத்தை கடந்து வந்தது சவாலாக இருந்தது என்று விவரிக்கும் இந்த குழுவுக்கு தூதரகத்தின் மூன்றாம் நிலை செயலாளரான விளாடிஸ்லவ் ஷோரோகின் தான் தள்ளுவண்டியை இழுத்து வந்த எஞ்சின் டிரைவராக செயல்பட்டுள்ளார்.

இவர்கள் ரஷ்ய எல்லையை அடைந்தவுடன் அவர்களை வரவேற்ற அதிகாரிகள், அங்கிருந்து விளாடிவாஸ்டோக் விமான நிலையத்திற்கு பேருந்தில் அனுப்பி வைத்தனர்.

கொரோனா வைரஸ் தங்கள் நாட்டுக்குள் புகுந்து விடாமல் இருக்க அனைத்து எல்லைகளையும் மூடி, சர்வதேச விமான போக்குவரத்துக்கும் தடைவிதித்ததோடு, உள்நாட்டிலும் ஆள்நடமாட்டத்திற்கு கட்டுப்பாடு விதித்திருக்கிறது வடகொரியா.

மேலும், எல்லையை தாண்டுபவர்களை கண்டவுடன் சுடுவதற்கு வடகொரியா உத்தரவிட்டிருப்பதாக, தென் கொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளபதி கடந்த செப்டம்பரில் கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது.

கொரோனா மட்டுமல்ல காற்றுகூட நாங்கள் சொன்ன திசையில் தான் வீசும் என்று மார்தட்டிக்கொள்ளும் வடகொரியா, அமெரிக்க மருந்து நிறுவனமான பைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மற்றும் சிகிச்சை முறைகளை களவாட முயன்றதாக தென் கொரியா கூறியதன் பின்னணி என்னவென்று தான் இதுவரை தெரியவில்லை.