மாஸ்கோ: ரஷ்யாவை உளவுப் பார்த்ததாகவும், அதனால், ஜப்பான் கடற்பகுதியை ஒட்டி, ரஷ்ய கடல் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்க கப்பலொன்று ரஷ்யாவால் விரட்டியடிக்கப்பட்டது என்றும் ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனிப்போர் நாயகர்களான அமெரிக்கா – ரஷ்யா இடையே, ராணுவரீதியாக அவ்வப்போது சிறு பிணக்குகள் ஏற்படுவது உண்டு. அமெரிக்கா, தங்களை உளவுபார்ப்பதாக ரஷ்யா பலநேரங்களில் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்நிலையில், ஜப்பான் கடற்பகுதியின் அருகில், ரஷ்ய கடல் எல்லைக்குள் சில கிலோ மீட்டர்கள் ஊடுருவிய ஒரு அமெரிக்க கப்பல் நிலைக்கொண்டு, ரஷ்யாவை உளவுப்பார்த்ததாக தகவல் கிடைக்கவே, அப்பகுதிக்கு விரைந்த ரஷ்ய கடற்படையினர், அக்கப்பலை விரட்டியடித்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட்மிரல் வினோகிரடோவ் என்ற பெயருடைய ரஷ்ய கப்பல், தங்கள் நாட்டு கடல் எல்லையில் உளவு பார்க்க வந்த அமெரிக்க கப்பலை விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது. ரஷ்ய கப்பலின் தாக்குதலை அடுத்து சர்வதேச கடல் பகுதிக்கு அமெரிக்க கப்பல் சென்றதாக கூறப்படுகிறது.