ரஷ்யாவில் ஒரு பெட்ரோல் நிலைய விளம்பரத்தை வச்சு செய்த ஆண்கள்..!

மாஸ்கோ: ரஷ்ய நாட்டில், பேட்ரோல் நிலையம் ஒன்று தனது விளம்பரத்துக்காக அறிவிப்பு ஒன்றை வெளியிட, அதை ஆண்களும் செய்துகாட்டி, இலவச பெட்ரோலை பெற்றனர்.

‘பிகினி’ உடை அணிந்து வருவோர் தங்களின் வாகனங்களுக்கு இலவசமாகப் பெட்ரோலை நிரப்பிக் கொள்ளலாம் என்ற அறிவிப்புதான் அது. ஆனால், இந்த அறிவிப்பு பெண்களுக்கு மட்டுமே என்று அந்த பெட்ரோல் நிலையம் குறிப்பிடவில்லை!

எனவே, இதுபோன்ற சந்தர்ப்பத்துக்காகவே காத்திருந்தனரா? என்று கேட்கும் வகையில், சிலர் பிகினி உடையில் அந்த பெட்ரோல் நிலையம் வந்து, பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி, சிலரை ஆச்சர்யம் அடையச் செய்தனர்.

விளம்பர அறிவிப்பின்படி, தங்களுடைய கார்களில் இலவசமாக பெட்ரோலை நிரப்பிச் சென்றனர். இந்த அறிவிப்பின் மூலம் வேறு எதையோ எதிர்பார்த்த பெட்ரோல் நிலையத்தார், ஆண்களின் இந்த செயலை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

பெண்களுக்குப் பதில் ஆண்கள்தான் அதிகளவில் பிகினி உடையில் வந்து பெட்ரோலை நிரப்பிச் சென்றனர். ஆனால், இதற்காக அந்த பெட்ரோல் நிலையம் பெரிதாக கவலைப்படத் தேவையில்லாமல் போனது. ஏனெனில், சமூக வலைதளம் என்று ஒன்று இருக்கிறதே..!

ஆண்களின் பிகினி உடை படங்கள் வைரலாக, தற்போது எதிர்பார்த்ததைவிட, அந்தக் குறிப்பிட்ட பெட்ரோல் நிலையத்திற்கு நல்ல விளம்பரம் கிடைத்துள்ளதாம்!