ரஷ்ய அதிபர் புடினை…. கேள்விகளால் துளைத்தெடுத்த ரஷ்ய பெண்மணி

செயின்ட் பீட்டர்ஸ்பர்க் :

ஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் புதன்கிழமை அன்று தான் வளர்ந்த செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் நகரில் உள்ள அவரின் அரசியல் வழிகாட்டியின் கல்லறைக்கு மரியாதை செய்ய சென்ற போது, அங்கு கூடியிருந்த மக்களில் ஒரு பெண் “உங்கள் சம்பளம் என்ன, ஒரு மாதத்திற்கு 10800 ரூபிள் (ரூ. 12000/-) வருமானத்தில் வாழ முடியுமா என்று கேட்டார்.

புடினை சரமாரி கேள்விகளால் துளைத்தெடுத்த அந்த பெண்மணி புடினிடம் :

“தயவுசெய்து என்னிடம் சொல்லுங்கள், 10,800 ரூபிள் ( ரூ. 12000) இல் வாழ முடியுமா?”

“இது மிகவும் கடினம் என்று நான் நினைக்கிறேன்”, ரஷ்ய ஊடகங்கள் வெளியிட்ட வீடியோ காட்சிகளில் புடின் அமைதியாக கூறினார்.

“உங்கள் ஊதியம் சுமார் 800,000 ரூபிள் (சுமார் ரூ. 9 லட்சம்) என்று நினைக்கிறேன்”, என்று அவர் கூறுகிறார். “ஆமாம்”, புடின் கூறுகிறார், மேலும், “ரஷ்யாவில் சிலர் அதிபரை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள்” என்றார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான பலன்களை பெற்று கணக்காளருக்கான படிப்பை படிப்பதாகக் கூறிய அந்தப் பெண், அன்றாட செலவுகளைப் பற்றிப் பேசினார், புடினுக்கு புள்ளிவிவரங்கள் தெரிந்திருக்குமா என்று சந்தேகத்தை எழுப்பினார். மளிகை கடைக்கு ஒரு முறை சென்றால் குறைந்தபட்சம் 1,000 ரூபிள் செலவாகிறது, அதே சமயம் இதர செலவுகளுக்கு சராசரியாக குறைந்தபட்சம் 4,000 ரூபிள் செலவாகிறது, என்று பட்டியலிட்டார்.

வழக்கமாக ஆடிட்டோரியங்களில் பிரத்யேகமாக அழைக்கப்பட்டவர்கள் கேட்கும் திட்டமிட்ட கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்து பழக்கப்பட்ட ஒருவருக்கு இதுபோன்று பொதுவெளியில், பொது மக்களிடம் இருந்து வந்த கேள்வி எதிர்பாராத விதமாக இருந்தது.

புதன்கிழமை அன்று தான், புடின் அரசு குழந்தைகள் மற்றும் குடும்பங்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான புதிய கொள்கை முயற்சிகளை வெளியிட்டிருந்தது, இதில் தரமுயர்த்தப்பட்ட குழந்தைகளுக்கான நன்மைகள் மற்றும் குழந்தையின் பிறப்புக்கான பணம் செலுத்துதல் ஆகியவை அடங்கும்.

தொடர்ந்து அவருடன் பேசிய புடின், “நிச்சயமாக நீங்கள் சொல்வது சரிதான், அரசாங்கம் தீர்க்க வேண்டிய நிறைய சமூகப் பிரச்சினைகள் எங்களிடம் உள்ளன”, என்றார்.

“நீங்கள் ஏன் அவற்றை தீர்க்கவில்லை?” என்று அந்த பெண்மணி பதில் கேள்வி கேட்டார்.

“நாங்கள் அவற்றுக்கு தீர்வுகாண்போம்” என்று புடின் கூறினார். அப்போது அந்தப் பெண் புடினை தன்னுடன் ஒரு புகைப்படத்திற்கு போஸ் கொடுக்கச் சொன்னார்.

அதிபர் புடின், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்கில் தனது ஆரம்பகால அரசியல் வழிகாட்டியான முன்னாள் நகர மேயர் அனடோலி சோப்சாக் மறைந்து இருபது ஆண்டுகளைக் குறிக்கும் வகையில் நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்ள சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.