மும்பை: டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரியான் ஹாரிஸ்.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக இருந்த அதே ஆஸ்திரேலியாவின் ஜேம்ஸ் ஹோப்ஸ், தனிப்பட்ட காரணங்களுக்காக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வர முடியாததால், ரியான் ஹாரிஸை இப்பதவிக்கு கொண்டுவந்துள்ளது டெல்லி அணி.

சர்வதே கிரிக்கெட் உலகில் மிகவும் தாமதமாக நுழைந்த ஹாரிஸ், 27 டெஸ்ட் போட்டிகளில் 113 விக்கெட்டுகளையும், 21 ஒருநாள் போட்டியில் 44 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். கடந்த 2009 முதல் 2015-ம் ஆண்டுவரை ஆஸ்திரேலிய அணியில் சிறந்த பந்துவீச்சாளராக ஹாரிஸ் வலம் வந்தார்.

ஐபிஎல் போட்டிகளில் ஏற்கனவே விளையாடியுள்ள ஹாரிஸ், 37 ஆட்டங்களில் விளையாடி 45 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெக்கான் சார்ஜர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்காக ஹாரிஸ் விளையாடினார். கடந்த 2015ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தார் ஹாரிஸ்.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் ரிக்கி பாண்டிங், சுழற்பந்துவீச்சு பயிற்சியாளர் சாமுவேல் பத்ரி, பேட்டிங் பயிற்சியாளராக உள்ள முகமது கைஃப் ஆகியோருடன் பந்துவீச்சுப் பயிற்சியாளர் ஹாரிஸ் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.