குர்கான்

குர்கானில் ரியான் சர்வதேசப் பள்ளியில் கொலையுண்ட பிரத்யுமன் வழக்கில் கைதான மாணவரை வயது வந்த குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது.

டில்லியின் அருகில் உள்ள குர்கானில் உல்ள ரியான் சர்வ தேசப் பள்ளியில் படித்து வந்த 7 வயது மாணவன் பிரத்யுமன்.   இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த பிரத்யுமன் பள்ளிக் கழிவறையில் கொலை செய்யப்பட்டு பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.   அதை ஒட்டி பள்ளி பேருந்து ஊழியர் அசோக்குமார் பாலியல் பலாத்காரம் செய்து சிறுவனைக் கொன்றதாக கைது செய்யப்பட்டார்.

அதன் பின் இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டது.   சிபிஐ விசாரணை நடத்தி அசோக் குமார் குற்றமற்றவர் எனவும் அதே பள்ளியைச் சேர்ந்த 16 வயது மாணவர் ஒருவர் கொலையாளி எனவும் தெரிய வந்தது.  சிபிஐ போலிசார் அந்த மாணவரை கைது செய்து விசாரித்தனர்.   அந்த மாணவர் தேர்வை தள்ளி வைக்க பிரத்யுமனை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.   இந்த வழக்கு வரும் 22 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.

இந்நிலையில் பிரத்யுமனின் தந்தை தனது மகன் தொண்டை அறுக்கப்பட்டு பயங்கரமாக கொலை செய்யப் பட்டது நினைக்கவே கொடூரமாக உள்ளது என்பதால் கைதான சிறுவனை வயது வந்த குற்றவாளி என அறிவித்து விசாரிக்குமாறு நீதி மன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.   அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் கைதான மாணவரை வயது வந்த குற்றவாளியாகவே கருதப்பட்டு விசாரணை நடத்தப்படும் என உத்தரவிட்டுள்ளது.