சென்னை:
டிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிய வேண்டாம் என்று தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் விஜயின் ரசிகர் மன்றமான விஜய் மக்கள் இயக்கத்தை அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சியாக பதிவு செய்யக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு விண்ணப்பித்துள்ளதாக நவம்பர் 5ம் தேதி தகவல் வெளியானது. இதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்த நடிகர் விஜய், தனது தந்தை தொடங்கியுள்ள அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ரசிகர்கள் யாரும் அதில் இணைய வேண்டாம். தனது புகைப்படத்தையோ படத்தையோ பயன்படுத்தக்கூடாது. மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டார்.

விஜயின் தந்தை எஸ்.ஏ.சி தொடங்கிய அரசியல் கட்சி தேர்தள் ஆணையத்தில் அளித்திருந்த விண்ணப்பத்தில், கட்சி தலைவராக பத்மநாபன் என்பவரும் பொதுச் செயலாளராக எஸ்.ஏ.சந்திரசேகர், பொருளாளர் விஜயின் தாயார் ஷோபா ஆகியோரின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஷோபா தன்னிடம் எஸ்.ஏ.சி அரசியல் கட்சி தொடங்குவது குறித்து தெரிவிக்காமல் கையெழுத்து கேட்டார் என்றும் தற்போது தான் கட்சியில் இருந்து விலகிவிட்டேன் என்றும் கூறினார்.

எஸ்.ஏ.சி விஜயின் முதல் ரசிகன் நான், விஜய் ரசிகர் மன்றத்தை விஜய் மக்கள் இயக்கமாக மாற்றினேன். விஜய் ரசிகர்களுக்கு அங்கீகாரம் பெற்றுத்தர வேண்டும் என்பதற்காகவே இதை செய்ததாகக் கூறினார்.

இந்த நிலையில், விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்வதை நிறுத்தினார் ஞாயிற்றுக்கிழமை தகவல் வெளியாகி உள்ளது. விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்ய வேண்டாம் என்று எஸ்.ஏ.சந்திரசேகர் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளார். இதன் மூலம், விஜய் பெயரில் தேர்தல் ஆணையத்தில் அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட இருந்தது முடிவுக்கு வந்துள்ளது தெரிகிறது.