தமிழக ஆளுநராக பொறுப்பு வகித்த ரோசய்யாவின் பதவிக்காலம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்தது. இதையடுத்து புதிய ஆளுநராக நியமிக்கப்படப்போவது யார் என்ற யூகங்கள் கிளம்பின.

மத்திய அமைச்சரவையில் இருந்து விலகிய நெஜ்மா ஹெப்துல்லா, குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விலகிய ஆனந்தி பென் படேல் ஆகியோர் பெயர் அடிபட்டது.
ஆனால் மகராஷ்டிர மாநில ஆளுநர் வித்யாசாகர், கூடுதல் பொறுப்பாக தமிழகத்தையும் கவனிக்கும்படி உத்தரவிடப்பட்டார்.

இதன் பிறகு, கர்நாடக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான டி.எச். சங்கரமூர்த்தி, தமிழக ஆளுநராக நியமிக்கப்படப்போவதாக யூகங்கள் கிளம்பின.
இதுவும் நடக்கவில்லை. தற்போது, கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் எஸ். எம். கிருஷ்ணா, தமிழக ஆளுநராக நியமிக்கப்படலாம் என்ற ஒரு தகவல் உலவுகிறது.

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர், கர்நாடக முதல்வராகவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். பிறகு, மகாராஷ்டிரா ஆளுநராக பொறுப்பு வகித்தார்.

இதற்கிடையில் கர்நாடக காங்கிரசில் தான் புறக்கணிக்கப்படுவதாக எஸ்.எம். கிருஷ்ணா வருத்தத்தில் இருப்பதாகவும் பாஜகவில் இணைவார் என்றும் கூறப்பட்டது. இதை கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா சமீபத்தில் உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில் நாளை பாஜகவில் அதிகாரபூர்வமாக எஸ்.எம். கிருஷ்ணா இணைகிறார்.

இதையடுத்து அவர் தமிழக ஆளுநராக விரைவில் நியமிக்கப்படுவார் என்று டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.