சோகம்:  எப்படி இருந்த எஸ்.ஆர்.பி. இப்படி ஆயிட்டார்!

மீபத்தில் நீட் தேர்வு குறித்து விவாகராத்துக்காக முக்கிய பிரமுகர்களை டில்லியில் சந்தித்து பேசினார் அ.தி.மு.க. பிரமுகரும் பாராளுமன்ற துணை சபாநாயகருமான தம்பிதுரை. பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.

தம்பிதுரை முன் தொலைக்காட்சி நிருபர்கள், வீடியோகிராபர்கள் கூடிநின்றனர்.   அவருக்கு பக்கத்தில்  அன்வர்ராஜா உட்பட சில அ.தி.மு.க. பிரமுகர்கள் சிலர் நின்றுகொண்டிருந்தனர்.

இவர்களுக்குப் பிறகு கடைசியாக ஒருவர், கூட்டத்துக்கு இடையே எட்டி எட்டி பார்த்துக்கொண்டிருந்தார். தொலைக்காட்சியில் இந்த பேட்டியைப் பார்த்த சிலருக்காவது  “எட்டிப் பார்க்கும் அந்த நபரை எங்கோ பார்த்தது போல இருக்கிறதே” என்ற எண்ணம் வந்திருக்கும்.

பரிதாப முகத்துடன் அப்படி எட்டி எட்டிப் பார்த்த அவர்.. எஸ்.ஆர்.பி.!!

கொஞ்ச நேரம் அப்படி எக்கி எக்கிப் பார்த்தவர், தன்னை யாரும் கண்கொள்ளவில்லை என்றவுடன், அப்படியே கிளம்பிவிட்டார்.

எட்டிப் பார்க்கும் எஸ்.ஆர்.பி. 1

காங்கிரஸிலும் பிறகு த.மா.காவிலும் முக்கிய பிரமுகராக கோலோச்சியவர், எஸ்.ஆர்.பி. கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது அப்போதைய அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை நேரடியாக சந்தித்து.. முக்கியமாக… சரிக்கு சரி உட்கார்ந்து அக் கட்சியில் சேர்ந்தவர். சேர்ந்த சிறிது நாட்களிலேயே அவரை ராஜ்யசாபா எம்.பி. ஆக்கினார், ஜெயலலிதா.

அத்தனை செல்வாக்குடன் இருந்த மனிதர், இப்போது எட்டிப் பார்க்கும் நிலைக்கு வந்துவிட்டார்.

“எஸ்.ஆர்.பி. நீண்ட நெடிய அரசியல் அனுபவம் கொண்டவர். சிறந்த நாடாளுமன்றவாதி. தமிழக சட்டசபையில் 1991 –  96 ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்தார். அப்போது  சிறந்த எதிர்க்கட்சி தலைவர் என்று பலராலும் பாராட்டப்பட்டார்.

எட்டிப் பார்க்கும் எஸ்.ஆர்.பி. 2

அதற்கு முன், தேவகவுடா அமைச்சரவையில் இணை அமைச்சராக பொறுப்புவகித்தார்.

டில்லி அரசியல் தொடர்புகளுக்கு உதவியாக இருப்பார் என்றுதான் அவரை எம்.பி. ஆக்கினார் ஜெயலலிதா.

அ.தி.மு.க.வில் சேர்ந்தபோது ஜெ.வுடன் எஸ்.ஆர்.பி.

ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க.வில் ஆளாளுக்கு பவர் பாலிடிக்ஸ் செய்யப்போக.. எஸ்.ஆர்.பியால் சமாளிக்க முடியவில்லை. இப்போது யார் யாரோ பிரஸ்மீட் கொடுக்க.. ஒதுங்கி நின்று எட்டிப் பார்க்கும் நிலைக்கு வந்தவிட்டார்” என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.