பெங்களூரு: இந்தியா -‍ தென்னாப்பிரிக்கா இடையிலான மூன்றாவது டி-20 போட்டியை வென்றதன் மூலம் தொடரை சமன் செய்தது தென்னாப்பிரிக்க அணி.

இந்தியா நிர்ணயித்த 134 ரன்கள் இலக்கை விரட்டிய அந்த அணி 16.5 ஓவர்களிலேயே 1 விக்கெட் மட்டுமே இழந்து 140 ரன்களை எடுத்தது. அந்த அணியின் கேப்டன் குவின்டன் டி காக் ஆட்டமிழக்காமல் 52 பந்துகளில் 79 ரன்களை அடித்தார்.

கடந்தமுறை இந்திய அணிக்கு விராத் கோலி செய்ததை, இந்தமுறை தன் அணிக்காக டி காக் செய்துள்ளார்.

முதலில் பவுலிங் தேர்வுசெய்ய வேண்டிய பிட்சில், சில காரணங்களுக்காக பேட்டிங் தேர்வுசெய்தார் கோலி. ஆனால், அந்த சவாலை அவராலேயே சமாளிக்க முடியவில்லை. 9 ரன்களை மட்டுமே அடித்தார். ஷிகர் தவான் மட்டுமே அதிகபட்சமாக 36 ரன்களை அடித்தார்.

ரிஷப் பன்ட் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 19 ரன்களை அடித்தனர். 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 134 ரன்கள் மட்டுமே எடுத்தது இந்திய அணி.

தென்னாப்பிரிக்க தரப்பில் ரபாடா 3 விக்கெட்டுகளையும், ஃபார்ட்யூன் மற்றும் ஹென்ரிக் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

சேஸிங் செய்வதற்கு உகந்த பிட்சில் தனது சேஸிங்கை துவக்கிய தென்னாப்பிரிக்கா, தனது பணியை சிறப்பாகவே செய்தது. அணியின் கேப்டன் டி காக், இந்திய பந்துவீச்சை சிதறடித்து விட்டார். அவர் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 5.

ஹென்ரிக்ஸ் 28 ரன்களும், பவுமா 27 ரன்களும் அடிக்க, 16.5 ஓவர்களில் 1 விக்கெட் மட்டுமே இழந்து வெற்றி கண்டது அந்த அணி. இந்திய அணியில் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு மட்டுமே ஒரு விக்கெட் கிடைத்தது.

க்ருணல் பாண்ட்யா மற்றும் நவ்தீப் சைனி ஆகியோரின் ஓவர்களை பதம் பார்த்தனர் தென்னாப்பிரிக்க பேட்ஸ்மென்கள்.

இந்த வெற்றியின் மூலம் டி-20 தொடரை சமன் செய்தது தென்னாப்பிரிக்கா.