சபரிமலை விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பினராயி விஜயன் முடிவு

--

திருவனந்தபுரம்:

சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல பூஜை தொடங்க உள்ள நிலையில், சபரிமலை விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் 10 வயது முதல் 50வயது வரை உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இது காலங்காலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நடைமுறை. இதை எதிர்த்து, உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அனைத்து வயது பெண்களுக்கு கோவிலுக்குள் செல்லலாம் என தீர்ப்பு வழங்கியது.

இதற்கு கேரள மாநில மக்களிடையே  பலத்த எதிர்ப்பு கிளம்பியது.  ஆனால், மாநில கம்யூனிஸ்டு அரசு உச்ச நீதி மன்ற தீர்ப்பை வரவேற்றது. உச்சநீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு பின்புலமாக பாஜக அரசியல் செய்து வருகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்,  சில இளம்பெண்கள் கடந்த ஐப்பசி மாத பூஜையின்போது கோவிலுக்குள் வர முயன்றது சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், பக்தர்கள் போராட்டம் காரணமாக அவர்கள் திருப்பி அனுப்பப் பட்டனர்.

தற்போது மண்டல பூஜைக்காக   வருகிற 16-ந்தேதி மாலை நடை திறக்கப்பட உள்ளது. தொடர்ந்து சுமார் 40 நாட்கள் கோவில்  நடை திறந்திருக்கும்போது,  கேரளா மட்டு மின்றி தமிழ் நாடு, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி போன்ற மாநிலங்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வருகை தருவார்கள்.

இதற்கிடையில், உச்சநீதி மன்ற தீர்ப்பு காரணமாக  550 இளம்பெண்களும் கோவிலுக்கு வர ஆன் லைன் மூலம் முன்பத செய்துள்ளனர். இதற்கு மாநிலம் முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

மாநிலம் முழுவதும் பாஜவினர் மீண்டும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதன் காரணமாக பாதுகாப்பு பணியில் 15ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், மாநில அரசு அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு  அழைப்பு விடுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சபரிமலை விவகாரம் தொடர்பான மேல்முறையீடு மனுமீதான விசாரணை நாளை உச்சநீதி மன்றத்தில் நடைபெற உள்ளது. அதன் முடிவை தொடர்ந்து அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்படும் என கூறப்படுகிறது.