திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோவில்: புதிய மேல்சாந்தியிடம் கோவில் சாவி ஒப்படைப்பு

பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்ட நிலையில், நேற்று இரவு கோவிலின் சாவி புதிய மேல்சாந்தியான சுதீர் நம்பூதிரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

மண்டல மற்றும் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் திறக்கப்படும் சபரிமலை ஐயப்பன் கோவில், அடுத்த 60 நாட்களுக்கு பின்னர் ஜனவரி மாதம் மீண்டும் அடைக்கப்படும். பின்னர் மாத பூஜைகளுக்காக மட்டுமே நடை திறக்கப்படும். அதன்படி, இந்த ஆண்டுக்கான மண்டல மற்றும் மகரவிளக்கு கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. பக்தர்களின் சரண கோஷத்திற்கு நடுவே திறக்கப்பட்ட நடையானது, நேற்றைய நித்திய பூஜைகளுக்கு பின்னர் இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடி மீண்டும் அடைக்கப்பட்டது.

அதன் பின்னர் பழைய மேல்சாந்திக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது. 18ம் படி வழியாக இறங்கிய பழைய மேல்சாந்தி, தனது பணியை முடித்த கையோடு புறப்பட்டு சென்றார்.

இன்று அதிகாலை மீண்டும் புதிய மேல்சாந்தி சுதீர் நம்பூதிரியால் கோவில் நடை திறக்கப்பட்டு, வழக்கமான பூஜைகள் நடைபெற்று வருகிறது. நடை திறக்கப்பட்ட உடன், நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காலை 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உச்ச பூஜைக்கு பிறகு, பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம் நடைபெறும். அத்தாள பூஜைக்கு பின்பு இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் இசைக்கப்பட்டு நடை அடைக்கப்படும்.