சபரிமலை எங்களுக்கே சொந்தம்: கேரள அராயா ஆதிவாசி மக்கள் போர்க்கொடி

பம்பா:

‘சபரிமலை எங்களுக்கே சொந்தமானது’, பந்தளம் அரசர் எங்களிடம் இருந்து அபகரித்து விட்டனர் என்று  கேரளாவின் மலா அராயா பழங்குடியின மக்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.

சபரிமலை கோவில் தொடர்பான சடங்குகளை செய்ய எங்களுக்கே உரிமை உள்ளது, அதற்கான அனுமதி தர வேண்டும் என்றும் தந்திரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

உச்சநீதி மன்ற தீர்ப்பு காரணமாக சபரிமலை கோவில் விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.கேரளாவில் மக்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. இதற்கிடையில்,  தீர்ப்பை மேற்கொள்காட்டி, இளம்பெண்கள் சிலர் கோவிலுக்கு வர முற்பட்டதால், பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.

இந்த நிலையில்,  சபரிமலை எங்களுக்கு சொந்தமானது என்று கேரளாவின் மலா அராயா பழங்குடியினர் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து, ஐக்கியா மலா அராய மகா சபாவின் (AMAMS) நிறுவனரும், பொதுச் செயலாளருமான பி.கே. சஜீவ் பரபரப்பு தகவல்களை தெரிவித்து உள்ளார்.

இவர் பல ஆண்டுகளாக  சபரிமலை அய்யப்பன் கோவில் மற்றும் அந்த பகுதியில் வசித்து வரும் ஆதிவாசி பழங்குடி இன மக்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறார்.

மலையின் அரசன் என்று வர்ணிக்கப்படும் மலஅரயா என்ற பழமையான சமூகத்தை சேர்ந்த, ஆதிவாசி மக்கள் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் சபரிமலை சுற்றி உள்ள  பகுதியில் உள்ள மலைகளில்  வசித்து வருவதாகவும், மலா அராயா என்ற ஆதிவாசி களின்   மூதாதையர்கள்தான் அய்யப்பன் கோவிலை நிர்வகித்து வந்தனர். ஆனால்,  19 ம் நூற்றாண்டில் பந்தளம்  மன்னர்களால் கோவில் அபகரிக்கப்பட்டதாகவும் கூறி உள்ளார்.

இதுகுறித்து கூறியுள்ள சஜீத்,  சபரிமலை ஆலயத்திற்கு அருகிலுள்ள பொன்னம்பலமேடு என்ற இடத்தில் ஒரு குகையில், கந்தன் மற்றும் கருத்தம்மா என்ற மலா ஆரையா பழங்குடியின தம்பதியருக்குத்தான் அய்யப்பன் பிறந்தார்  என்றும்,  அப்போது கேரளா மீது சோழர்கள் தாக்குதல் நடை பெற்றதாகவும்,. அருகிலுள்ள திருவாங்கூரில் உள்ள சேர மற்றும் ஆடிய வம்ச மன்னன் ஆட்சி செய்து வந்ததாகவும்  தெரிவித்துள்ளார்.

பின்னர்  மலா அராயா பழங்குடியினருக்கு பிறந்த அய்யப்பன் தனது நண்பர்களுடன் சேர்ந்து போர்க்கலை பயிற்சி பெற்று அந்த பகுதியில்,  ஒரு வலுவான சமூகத்தை உருவாக்கினார் என்றும் கூறி உள்ளார். ஆனால்,  1900ம் ஆண்டுகளில், பந்தளம் அரச குடும்பத்தினர் சபரிமலை அய்யப்பன் ஆலயத்திற்கு விஜயம் செய்தனர்.  அப்போது பிராமணர் தஸ்மன் மோதோம் குடும்பத்தைச் (தந்த்ரி குடும்பம்) சேர்ந்த குருமார்களை அழைத்து வந்து, சபரிமலை அய்யப்பன்  கோவிலில் சடங்குகளை குடும்பத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர் என்றும் சஜீத் கூறி உள்ளார்.

அதன்பிறகுதான் சபரி அய்யப்பன் கோவில், பிரதான பூசாரி பாத்திரம் பிராமண குடும்பத்திற் குள் (தந்திரி) சென்றது என்றும்,  நாளைடைவில் சபரிமலை கோவிலை சுற்றி உள்ள பகுதியில் வசித்து வந்த ஆதிவாசி மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டனர் என்றும் கூறி உள்ளார்.

தற்போது மீண்டும் தங்களது உரிமையை மீட்டு எடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக வும்,”எங்கள் மூதாதையர்கள் போல, சபரிமலை ஆலயத்தில் சடங்குகள் செய்வதற்கான உரிமை எங்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளனர்.

இதன் காரணமாக தற்போது சபரிமலை விவகாரம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே, சபரிமலை ஐயப்பன் ஆதிவாசிகளுக்கு சொந்தமானது. பந்தளம் மகாராஜா குடும்பத்தினர் இதனை கைப்பற்றிவிட்டனர். சபரிமலையை ஆதிவாசிகளிடம் ஒப்படைக்க வேண்டும்.  கேரள ஆதிவாசி கோத்ரா மகாசபை தலைவி ஜி.கே.ஜானு கூறி இருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

அதுபோல,  சபரிமலை கோயிலின் பூஜை மற்றும் சம்பிரதாயம் மலை அரையன் ஆதிவாசி சமூகத்தினுடையது. இது, அனைவருக்கும் தெரியும் என்றும் கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.