சபரிமலை பக்தர்கள் கவனத்துக்கு: சன்னிதானத்தில் புதிய கட்டுப்பாடுகள்

பரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானத்தில் புதிய கட்டுப்பாடுகளை கேரள காவல்துறை விதித்துள்ளது.

கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனுமதி மறுக்கப்பட்டு வந்த பத்து முதல் ஐம்பது வயது வரையிலான பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கிலும் அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் செல்லலாம் என்று கடந்த செப்டம்பர் 28-ம் தேதி உச்ச நீதி மன்றம்,தீர்ப்பளித்தது.

இதையடுத்து கடந்த அக்டோபர் 17-ம் தேதி ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டபோது சில இளம்பெண்கள் கோயிலுக்குச் செல்ல முயன்றனர். அப்போது சில இந்து அமைப்புள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கடந்த 22-ம் தேதி கோயில் நடை சாத்தப்பட்டது.

இந்த நிலையில் மண்டல பூஜைக்காக சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துபவர்களை கட்டுப்படுத்த ஆயிரக்கணக்கான காவலர்கள் சபரிமலையில் குவிக்கப்பட்டுள்ளனர். சன்னிதானத்துக்கு ஊடகங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருக்கிறது. .

மேலும், சபரிமலை ஐயப்பன் கோயில் சன்னிதானம் பகுதியல் புதிய கட்டுப்பாடுகளை கேரள காவல்துறையினர் விதித்துள்ளனர். இதுகுறித்து சபரிமலை ஐயப்பன் கோயில் தேவசம்போர்டு நிர்வாக அதிகாரி சுதீஷ் குமார் தெரிவித்ததாவது:

“காவல்துறையினர் இன்று காலை ஒரு கடிதத்தை எங்களிடம்  அளித்தனர். அதில் அரவணை பாயசம், அப்பம் உள்ளிட்ட பிரசாதங்கள் விற்பனை செய்யும் கவுன்டர்களை இரவு பத்து மணிக்கு மூடிவிட வேண்டும் என்றும்  அன்னதான கூடங்களை 11:00 மணக்குள் மூடிவிட வேண்டும் என்றும் கோயில் நடையை சாத்தி தங்களிடம் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சன்னிதானத்தில் உள்ள அனைத்து கடைகளும் இரவு பத்து மணிக்குள் அடைக்கப்பட வேண்டும்; அதன்  பிறகு பக்தர்கள் யாரும் சன்னிதானத்தில் தங்கக்கூடாது என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுபற்றி நானோ, கோயில் நிர்வாகமோ முடிவெடுக்க முடியாது. தேவசம்போர்டு கூடிதான் முடிவெடுக்க முடியும். அந்த முடிவை மட்டுமே நாங்கள் செயல்படுத்த முடியும்” என்று று சுதீஷ்குமார் கூறினார்.