சபரிமலை விவகாரத்தில் அரசியல் செய்கிறது பாஜக: மாநில குழு உறுப்பினர் உட்பட இருவர் விலகி சி.பி.எம். கட்சியில் இணைந்தனர்

பரிமலை விவகாரம் சுயநலம் அரசியல் பாஜக மாநில குழு உறுப்பினர் இருவர் விலகல் சி.பி.எம். கட்சி இணைந்தனர்

சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க. சுயநலத்துடன் கீழ்த்தரமான அரசியல் செய்வதாக குற்றம்சாட்டி அக்கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் உட்பட இருவர் கட்சியவிட்டு விலகி சி.பி.எம். கட்சியில் இணைந்தனர்.

கேரளாவில் உள்ள பிரபலமான சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது.  இதையடுத்து சில பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். ஆனால் பா.ஜ.க. உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் சில இதை எதிர்த்து போராட்டங்கள் நடத்தின. இதனால் அவர்கள் கோயிலுக்குச் செல்ல முடியாமல் திரும்பிவிட்டனர்.

இந்த நிலையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு கேரள பாஜக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியதோடு, கேரள சட்டசபையையும் முடக்கி வருகிறது.

இதற்கிடையே சபரிமலை கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கேரள காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்கின்றனர்.

இந்நிலையில் சபரிமலை விஷயத்தை  சுயஅரசியல் லாபத்திற்காக பாஜக கீழ்த்தரமான அரசியல் செய்வதாக அக்கட்சியைச் சேர்ந்த இருவர் குற்றம்சாட்டியதோடு, கட்சியில் இருந்து விலகி சி.பி.எம். கட்சியில் இணைந்துளளனர்.

இவர்களில் ஒருவர்  கேரள பாஜக மாநில குழு உறுப்பினரான கிருஷ்ண குமார்  ஆவார். இன்னொருவர் ஜெயகுமார்.

கடந்த சில நாட்களுக்கு முன் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் இவர்கள் கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜகவினரே அக்கட்சியின் மீது இந்த விவகாரத்தில் குற்றம்சாட்டி விலகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.