சபரிமலை விவகாரம்: உச்சநீதி மன்றத்தில் கேரளஅரசு சார்பில் மனு தாக்கல் செய்ய முடிவு

டில்லி:

பரிமலை தீர்ப்பை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை எடுத்துரைத்து, இந்த விவகாரத்தில் உச்சநீதி மன்றம் வழிகாட்ட வேண்டும் என்று கேரள அரசு சார்பில் உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது,.

பரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதி மன்றம் கடந்த செப்டம்பர் 28 ம் தேதி பரபரப்பு  தீர்ப்பு வழங்கியது. இது நாடு முழுவதும் உள்ள அய்யப்ப பக்தர்களியே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, உச்சநீதி மன்ற தீர்ப்புக்கு எதிராக கேரள மாநிலம் போர்க்கோலம் பூண்டது.

இதற்கிடையில் கடந்த ஐப்பசி மாத பூஜைக்காக அய்யப்பன் கோவிலுக்கு வர சில பெண்கள் முயற்சி செய்ததால், இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்தது. அதைத்தொடர்ந்து கேரளா முழுவதும் அய்யப்ப பக்தர்கள், மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து, போராட்டத்தில் குதித்த னர். கோவிலுக்கு வரும் வாகனங்கள் சோதனையிடப்பட்டு, அதில் பெண்கள் இருந்தால் அவர்களை விரட்டிவிட்டனர்.

இதையடுத்து,  தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி ஏராளமான மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஆனால், உடனடியாக விசாரிக்க முடியாது என மறுத்த உச்சநீதி மன்றம், இதுகுறித்து, ஜனவரி 22ந்தேதி விசாரணை நடத்தலாம் என்று கூறி ஒத்தி வைத்தது.

இந்த நிலையில், தற்போது மண்டல பூஜைக்காக கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. ஆனால், கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க மாட்டோம் என்று பந்தள அரச குடும்பத்தினர் மற்றும் கோவிலில் பூஜைகள் செய்துவரும் தந்திரிகளும் கூறி வருகின்றனர். மேலும் பெண்கள் வருவதை தடுக்கும் வகையில் ஆங்காங்கே அய்யப்ப பக்தர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக மாநிலம் முழுவதும் ஒருவித அச்சமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதற் கிடையில் சபரிமலை பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, சுமார் 15 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கேரள மாநில அரசு சார்பில், உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில், உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்தும், தீர்ப்பை அமல்படுத்த முனைப்பு காட்டுவதன் காரணமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாகவும் குறிப்பிட்டு கேரள மாநில தலைமை செயலாளர் சார்பில் வழிகாட்டுதல்கள் வழங்கும்படி கோரப்பட்டுள்ளது.

இதுதொடர்பான வழக்கு கேரள உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், சமீபத்தில் நடைபெற்ற விசாரணையின்போது, கேரள காவல்துறை உயர்அதிகாரி லோக்நாத் பெகேரா சார்பில்  சுமார் 40 பக்கம் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தீர்ப்பை அமல்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அதன் காரணமாக எழுந்த சட்டம் ஒழுங்கு பிரச்சினை மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் விவரம் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், சபரிமலை விவகாரத்தில், தீர்ப்பை அமல்படுத்த உச்சநீதி மன்றம் வழிகாட்ட வேண்டும் என்ற கேரள அரசு மனு தாக்கல் செய்ய உள்ளது.

சபரிமலை போராட்டத்திற்கு பின்புலமாக ஆர்எஸ்எஸ், பாஜக, பிஎம்ஸ், யுவமோர்ச்சா போன்ற இந்துத்துவா அமைப்புகள் இருப்பதாகவும் கேரள அரசு தெரிவித்து உள்ளது.