கொச்சி: கேரள மாநிலத்தில் உள்ள பிரபலமான சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி  நடை திறக்கப்படும் என அறிவிக்கப் பட்டு உள்ளது. இதையொட்டி, தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம் என்று தேவசம் போர்டு தெரிவித்து உள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவிலில்  மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காலத்தை ஒட்டி நவம்பர் 15ம் தேதி மாலை நடை திறக்கப்படுகிறது. அதையடுத்த  நவம்பர் 16ம் தேதி முதல் பக்தர்கள் அனுமதிக்கபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. பக்தர்களுக்கு கொரோனா நெகடிவ் சான்றிதழ் கட்டாயம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை ஐய்யப்பன் கோயில் மண்டல, மகரவிளக்கு பூஜை கார்த்திகை 1ம் தேதி ( நவம்பர் 15 ஆம் தேதி) அன்று  மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு 60 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதையொட்டி, பக்தர்களை அனுமதிப்பது தொடர்பாக, திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில்,கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளுடன் பக்தர்கள் தரிசனம் மேற்கொள்ள அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கார்த்திகை மாத மண்டலபூஜையின்போது, லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிவது வழக்கம். இதையொட்டி, தற்போது நாள் ஒன்றுக்கு அனுமதிக்கப்பட்டு வரும் 1000 பக்தர்கள் என்பதை மேலும் அதிகரிக்க தேவசம் போர்டு திட்டமிட்டு வருவதாகவும், கொரோனா விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வலியுறுத்தி இருப்பதுடன்,  கோவிலுக்கு வரும் பக்தர்கள் மட்டுமின்றி,  கோவில்  தொடர்பான பணியில் உள்ள அனைத்து பணியாளர்களுக்கும் கொரோனா “நெக்கட்டிவ்” சான்று கட்டாயம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்,   தரிசனத்திற்கு வரும் வெளி மாநில பக்தர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு இங்கேயே தங்கி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.