நவம்பர் 13ந்தேதி சபரிமலை சீராய்வு மனுக்கள் மீது விசாரணை: உச்சநீதி மன்றம் அறிவிப்பு

டில்லி:

பரிமலை விவகாரத்தில் உச்சநீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை நவம்பர் 13ந்தேதி நடைபெறும் என்று உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள், அனைத்து வயதுடைய பெண்களும் வழிபடலாம் என்று  கடந்த மாதம் (செப்டம்பர்) 29ந்தேதி உச்சநீதி மன்ற அமர்வு பரபரப்பு   தீர்ப்பு வழங்கியது.

உச்சநீதி மன்ற தீர்ப்பு ஆகம விதிகளுக்கு எதிராக உள்ளது என்று அய்யப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், கேரள மக்கள் மத்தியில் இந்த தீர்ப்பு அதிருப்தியை ஏற்படுத்தியது.

காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் மரபுகளை உச்சநீதி மன்றம் உடைந்தெறிந்து உள்ளது என்று கோபாவேசமடைந்த கேரள மக்கள் பல இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவியது. பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதும் பல பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போராட்டக்காரர்களால் அவர்கள் தடுத்து திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில் அய்யப்பன் கோவில் விவகாரம் குறித்த உச்சநீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து மாநில அரசு சார்பில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று கோரப்பட்டது. ஆனால், கேரள முதல்வர்  மாநில அரசு மேல்முறையீடு செய்யாது உறுதிப்பட தெரிவித்தார்.

இந்த நிலையில்,  தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கத் தலைவர் ஷியாலஜா விஜயன், கேரள பிராமணர் சங்கத்தினர், பந்தள அரச குடும்பத்தினர்,  பல இந்து அமைப்புகள் உள்பட 18  அமைப்புகள் சார்பில்  உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  மேலும், திருவாங்கூர் தேவஸ்தானம் சார்பிலும் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படலாம் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்த நிலையில்,  சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்து உச்சநீதி மன்றம், அது தொடர்பான விசாரணை நவம்பர் 13ந்தேதி நடைபெறும் என்று அறிவித்து உள்ளது.