சபரிமலை தீர்ப்பு: ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் உச்சநீதி மன்றத்தில் சீராய்வு மனு தாக்கல்

டில்லி:

பரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்த்து,  ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் உச்சநீதி மன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சபரிமலையில் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. இதற்கு கேரளா மட்டுமல்லாது நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த நிலையில்,  தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஐயப்ப பக்தர்கள் சங்கம் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்தலமான சபரிமலைக்கு செல்ல 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இதனை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சபரிமலை ஐயப்பன் கோயிலும் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பு கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. தீர்ப்பு எதிராக நாடு முழுவதும் இந்துக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.  வழிபாட்டு முறையில் உச்சநீதி மன்றம் தலையிடுவதாக  பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து, கேரளா, தமிழ்நாடு, டில்லி உள்பட பல மாநிலங்களில் போராட்டங்கள்நடைபெற்று வருகின்றன.

இந்த தீர்ப்பை கேரள கம்யூனிஸ்டு அரசு அமல்படுத்துவோம் என்று கூறி அதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஆனால், கேரள எதிர்க்கட்சியான காங்கிரஸ் அரசுக்கு எதிராக போராட்டத்தில்  ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில்,  ஐயப்ப நம ஜப யாத்ரா எனும் ஐய்யப்ப பக்தர்கள் அமைப்பு  தலைநகர் டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தீர்ப்புக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் வெள்ளை நிற சேலை அணிந்து தீர்ப்புக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.

இந்த நிலையில் சபரிமலை தீர்ப்பை எதிர்த்து தேசிய ஐயப்ப பக்தர்கள் சங்கம் சார்பில் இன்று உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை சங்க தலைவர் ஷியலஜா விஜயன் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,  கோவில் ஆகம விதிகள் மற்றும் தொன்றுதொட்டு நடைமுறையில் உள்ள வழிபாட்டு முறைகளை சுட்டிக் காட்டி உள்ளார். இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அரசியல் சாசனத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கியிருப்பதாகவும், தீர்ப்பை உடனே ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரி உள்ளார்.

இந்த மனு விரைவில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது