ஸ்ரீ ஐயப்பனின் தனித்தன்மையை மதிக்க வேண்டும் : பெண்கள் சார்பில் வாதம்

டில்லி

ஸ்ரீ ஐயப்ப சாமியின் தனித்தன்மையை மதிக்க வேண்டும் என ஐயப்ப சாமியின்  பக்தைகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

சபரிமலை ஸ்ரீ ஐயப்ப சாமி கோவிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.   ஐயப்ப சாமி நைஷ்டிக பிரம்மச்சாரி என்பதால் அந்த பகுதிக்குள் மாதவிலக்கு அடையும் வயதுடைய பெண்களை பல நூற்றாண்டுகளாக அனுமதிக்கப்படுவதில்லை.  இந்நிலையில் சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என ஒரு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கை விசாரிக்கும் அமர்வு அரசியலமைப்பு சட்டப்படி அனைவரும் சமம் என்பதால் பெண்களை அனுமதிக்காதது தவறு இல்லையா என கேள்வி எழுப்பி இருந்தது.    மேலும் இது பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி இல்லையா எனவும் வினவியது,

இந்நிலையில் ஐயப்ப சாமியின்  பக்தைகள் சார்பில் வைக்கப்பட்ட வாதத்தில், “பாலின பேதம் காரணமாக பெண்கள் சபரிமலை கோவிலுக்கு அனுமதிக்கப்படுவதில்லை என்பது தவறானதாகும்.   10 வயதுக்குட்பட்ட பெண்களும் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் கோவிலுக்கு வர தடை இல்லை.

கடவுளை நம்புவதும் மத பழக்கங்களை பின்பற்றுவதும் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும்.  அதன்படி ஸ்ரீஐயப்பசாமிக்கு உள்ள தனித்தன்மையை மாற்றுவது தவறாகும்.   அது மத நம்பிக்கைக்கு எதிரானதாகும்.  ஸ்ரீஐயப்ப சாமி  நைஷ்டிக பிரம்மச்சாரி என்பதும் அவருடைய சன்னிதானத்துக்கு மாதவிலக்காகும் பருவத்தில் உள்ள பெண்கள் வரக்கூடாது என்பதும் சாமியின் தனித்தன்மை ஆகும்.

கேரளப் பெண்கள் வெகு காலமாக இந்த விதிமுறையை பின்பற்றி வ்ருகின்றனர்,    இந்த மாநிலப் பெண்கள் சமுக முன்னேற்றமும் நல்ல கல்வி அறிவும் உடையவர்கள்.   அவர்களில் பலர் சபரிமலை விதிகளை எதிர்க்கவில்லை.   மேலும் அவர்கள் யாரும் இது தங்களுக்கு இழைக்கபட்ட அநீதி என கருதவில்லை.    அதனால் இது பெண்களுக்கான அநீதி என்பது ஆதாரமற்றது” என வாதிடப்பட்டது.

.