திருவனந்தபுரம்

பரிமலையில் பெண்களை அனுமதித்தால் சபரிமலை தாய்லாந்து போல உல்லாச சுற்றுலா மையமாக ஆகிவிடும் என கோயில் அதிகாரி தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் நெடுங்காலமாக 10 வயதிலிருந்து 50 வயது வரை உள்ள பெண்களுக்கு அனுமதி கிடையாது.   ஐயப்ப சாமி நைஷ்டிக பிரம்மச்சாரி என்பதால் பருவ வயதுடைய பெண்கள் (அதாவது மாத விலக்காகும் பெண்கள்) வரக்கூடாது என்பது கோயிலின் ஐதீகம்.  இதை எதிர்த்து சில பெண் உரிமை போராளிகள் வழக்கு தொடர்ந்தனர்.  அந்த வழக்கு தற்போது அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு உள்ளது.

சபரிமலைக் கோவிலை நிர்வகிக்கும் திருவாங்கூர் தேவசம் போர்டின் தலைமை அதிகாரி கோபாலகிருஷ்ணன் இது பற்றி கேரள அமைச்சர் காகம்பள்ளி சுரேந்திரனுக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தில் அவர், “நீண்ட நெடுங்காலமாக பெண்களை சபரிமலையில் அனுமதிப்பது வழக்கம் இல்லை.  நமது பண்பாட்டையும், பழைய பழக்கங்களையும் நாம் மதிக்க வேண்டும்.

சபரிமலைக்கு பெண்கள் வருவது அவர்களின் பாதுகாப்புக்கு உகந்தது அல்ல.  இவ்வளவு கூட்டம் வரும் இடத்தில் பெண்களை அனுமதித்தால் பல தொந்தரவுகள் நேரும். இதனால் பல தவறான நடவடிக்கைகள் நடக்கலாம்.  இது போல பெண்களும் ஆண்களும் சேர்ந்து சபரிமலைக்கு வர ஆரம்பித்தால் மலையின் புனிதம் பாழாகும்.  பிறகு சபரிமலையும் தாய்லாந்தை போல ஒரு உல்லாச சுற்றுலா மையமாக மாறி விடும்.  இது சபரிமலை.  தாய்லாந்து இல்லை” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அமைச்சர் சுரேந்திரன், “கோபாலகிருஷ்ணனின் ஒப்பீடு மிகவும் முட்டாள் தனமானது.  அவர் பெண்களையும் பக்தர்களையும் மிகவும் அவமானப்படுத்தியுள்ளார். இதற்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும்.  அவருடைய கருத்தை திரும்பப் பெற வேண்டும்” என பதில் அளித்துள்ளார்.