வரும் 14 ஆம் தேதி சபரிமலை நடை திறப்பு : ஒரு மணி நேரத்துக்கு 200 பக்தர்களுக்கு அனுமதி

பரிமலை

ரும் 14 ஆம் தேதி மாலை சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு ஒரு மணி நேரத்துக்கு 200 பக்தர்கள் வீதம் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட உள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் நாடெங்கும் உள்ள அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது.   தற்போது அந்த தடைகள் நீக்கப்பட்டு கட்டுப்பாடுகளுடன் பல கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.  அவ்வகையில் கேரளாவில் உள்ள சபரிமலை கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர்

இது குறித்து கேரள தேவசம் அமைச்சர் கடகம் பள்ளி சுரேந்திரன்,”கேரள மாநிலத்தில் வரும 9 ஆம் தேதி முதல் பக்தர்கள் நிபந்தனைகளுடன் வழிபாட்டுத் தலங்களில் அனுமதிக்கப்படுவார்கள்.  கேரளாவின் முக்கிய கோவில்களில் ஒன்றான சபரிமலை கோவிலில் வரும் 14 ஆம் தேதி மாலை நடைதிறக்கப்படும்.  ஆனி மாத பூஜைகள் வரும் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

அதன் பிறகு 10 நாட்கள் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குவதால் வரும் 28 ஆம் தேதி வரை கோவில் நடை திறந்து இருக்கும்.   இம்முறை ஆன்லைனில் பதிவு செய்வோருக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும்.  பதிவு செய்யாதோருக்கு அனுமதி இல்லை.   ஒரு மணி நேரத்தில் 200 பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.    கேரளாவுக்கு வெளியில்  இருந்து வருவோர் கொரோனா பரிசோதனை சான்றிதழ் மற்றும் கேரள மாநில இ பாஸ் வைத்திருக்க வேண்டும்.” என தெரிவித்துள்ளார்

சபரிமலை கோவில் பக்தர்களுக்கான நிபந்தனைகள் பின் வருமாறு

  1. சபரிமலையில் அதிகாலை 4 மணி முதல் மதியம் 1 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும்.
  2. 10 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், 65 வயதைத் தாண்டியவர்களுக்கு அனுமதியில்லை.
  3. விஐபி தரிசனம் கிடையாது.
  4. சபரிமலையில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி இல்லை. இரவு 11 மணிக்கு நடை சாத்தப்பட்டதும் மலை இறங்க வேண்டும்.
  5. கேரள அரசு பேருந்துகள், தனியார் வாகனங்கள் பம்பை வரை மட்டுமே அனுமதிக்கப்படும்.
  6. ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அப்பம், அரவணை வழங்கப்படும். கவுண்டர் விற்பனை கிடையாது.
  7. வண்டி பெரியாறு வழியாகப் பக்தர்கள் வர அனுமதியில்லை.

கார்ட்டூன் கேலரி