கோவாவில் காங்கிரஸூக்கு கட்சியினரே குழிபறித்தனர்!! திக் விஜய் சிங் பதிலடி

--

பனாஜி:

‘‘கோவாவில் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் தவறிவிட்டார்’’ என்று அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டினர். இதற்கு திக் விஜய் சிங் பதிலடி கொடுத்துள்ளார்.

‘‘தேர்தலுக்கு முன்பே விஜய் சர்தேசாய் தலைமையிலான கோவா முற்போக்கு கட்சியுடன் கூட்டணி வைக்கலாம் என்று தெரிவித்தேன். ஆனால், அப்போது காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இதற்கு குழிபறித்துவிட்டனர். தற்போது அந்த கட்சி சார்பில் வெற்றி பெற்ற 3 வேட்பாளர்களின் ஆதரவுடன் தான் பாஜ ஆட்சி அமைத்துள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘இரண்டு மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேசப்பட்டது. இதில் பாபுஷ் கட்சியுடன் கூட்டணி வைக்கப்பட்டது. இதில் 5ல் 3 இடங்கள் வெற்றி பெற்றுள்ளோம். மற்றொரு கட்சியான கோவா முற்போக்கு கட்சியுடன் கூட்டணி வை க்கவிடாமல் எங்களது கட்சியினரே குழிபறித்துவிட்டனர்’’ என்று திக் விஜய் சிங் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

‘‘4 இடங்களில் போட்டியிட்ட கோவா முற்போக்கு கட்சி 3 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இந்த கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தால் 22 இடங்கள் கிடைத்திருக்கும்’’ என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூட்டணியை தடுத்தது யார் என்பதை வெளியிடவில்லை. எனினும் கோவாவில் புதிதாக வெற்றி பெற்ற விஸ்வஜித் ரானே ‘‘கட்சி தலைவர்களின் முட்டாள்தனத்தால் கோவாவில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்துவிட்டோம்’’ என்று தெரிவித்திரு ந்தார்.

பாஜ ஆட்சி அமைக்க கவனர் மிரிதுலா சின்ஹா அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் உ ச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பதவி ஏற்ற 48 மணி நேரத்தில் பெரும்பான்மையை நிரூபக்க மனோகர் பரிக்கருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதைதொடர்ந்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ரானே கலந்துகொள்ளாமல் புறக்கணித்துவிட்டார். 22 வாக்குகள் பெற்று மனோகர் பரிக்கர் வெற்றி பெற்றார். ரானே தற்போது கட்சியில் இருந்தும் வெளியேறி, தனது எம்எல்ஏ பதவியையும் ராஜினாமா செய்துவிட்டார். மேலும், பல தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘‘என்னை வில்லன் போல் பார்க்கின்றனர். கடந்த 2013ம் ஆண்டு முதல் கட்சியின் செயலாளர் செல்லக்குமார் கோவாவில் கட்சியை வளர்க்க கடினமாக உழைத்தார். சட்டமன்றத்தில் இருந்த 9 காங்கிரஸ் எம்எல்ஏ.க்களில் 6 பேர் மட்டுமே சிறப்பாக செயல்பட்டனர். மொத்த அமைப்பே ஒழுங்கற்றதாகிவிட்டது.

சிலர் ஆம்ஆத்மிக்கு செல்ல இருப்பதாக கணித்துள்ளனர். ஆம்ஆத்மி பூஜ்யத்தை அடைந்துள்ளது. பாஜ 22ல் இருந்து 13 இடங்களாக குறைந்துள்ளது. இந்த நிலையில் என்னை வில்லனாக பார்ப்பது எப்படி நியாயம்’’ என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

மனோகர் பரிக்கர் ஆட்சி அமைக்க கோவா முற்போக்கு கட்சியின் தலைவராஜ விஜய் சர்தேசாய் கடும் முயற்சி செய்தார். அவரது கட்சி எம்எல்ஏ.க்கள் ஆதரவளிக்கவும் அவர் தான் தீவிராக களம் இறங்கினார். முன்னதாக மனோகர் பரிக்கர் கோவா முதல்வராக இருந்தபோதும், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராகவும் இருந்தபோதும் இவர் தான் அவரை கடுமையாக சாடினார். இவர் தற்போதைய கோவா பாஜ ஆட்சியில் அமைச்சராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.