கொல்கத்தா: சச்சினிடம் இரண்டு விஷயங்களுக்கும் காரணம் உண்டு என்று ஆட்டத்தின் முதல் பந்தை அவர் எதிர்கொள்ள விரும்பாமல் தவிர்த்தது குறித்து ருசிகர தகவலைப் பகிர்ந்து கொண்டுள்ளார் சவுரவ் கங்குலி.
இந்திய அணியின் புகழ்பெற்ற துவக்க இணைகளாக விளங்கியவர்கள்தான் சச்சினும் கங்குலியும். இவர்கள் இருவரும் சேர்ந்து 136 இன்னிங்ஸ் விளையாடி சேர்த்த ரன்கள் 6609. இவற்றுள், 21 சதங்களும் 23 அரைசதங்களும் அடக்கம்.
இந்த இணை துவக்கத்தில் களமிறங்கிய காலத்தில், பெரும்பாலும், ஆட்டத்தின் முதல் பந்தை சந்திக்காமல் தவிர்த்து விடுவார் சச்சின். தற்போது இதுகுறித்து மனம் திறந்துள்ளார் கங்குலி.
அவர் கூறியுள்ளதாவது, “சிறப்பான ஃபார்மில் இருக்கும்போது, முதல் பந்தை எதிர்கொள்ளாமல் எதிர்முனையில் நின்றால், நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்பார். அதேசமயம், ஃபார்மில் இல்லாத காலத்தில், எதிர்மமுனையில் நின்றால், நெருக்கடியிலிருந்து விடுபடலாம் என்பார்.
எனவே, இரண்டுக்குமே அவரிடம் காரணம் இருந்தது” என்று கூறியுள்ளார் கங்குலி. ஆன்லைன் நிகழ்ச்சி ஒன்றில், டெஸ்ட் துவக்க வீரர் மாயங்க் அகர்வாலிடம் பேசும்போது இதை தெரிவித்தார் கங்குலி.