கோலி அல்ல, சச்சினே சிறந்த ஒருநாள் வீரர் – கம்பீரின் கணிப்பு இது!

புதுடெல்லி: ஒருநாள் போட்டிகளைப் பொறுத்தவரை, விராத் கோலியைவிட, சச்சின் டெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மேன் என்றுள்ளார் கவுதம் கம்பீர்.

ஊரடங்கு நடைமுறையால், விளையாட்டுத் தொடர்கள் எதுவும் நடக்காமல் வீரர்கள் முடங்கியுள்ள நிலையில், கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலரும் வீரர்களை ஒருவரோடு ஒருவர் ஒப்பிட்டு, தங்களின் கருத்துகளைப் பகிர்ந்து கொள்வதை அடிக்கடி செய்து வருகின்றனர்.

அந்த வகையில், முன்னாள் வீரர் கவுதம் கம்பீர், சச்சின் – கோலி ஒப்பீட்டை செய்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது, “ஒருநாள் போட்டிகளில் கடினமான காலகட்டங்களில் ஆடியவர் சச்சின். பேட்ஸ்மென்களுக்கு சாதகமான அம்சங்கள் அப்போது கிடையாது.

ஒரேயொரு வெள்ளைப் பந்து மட்டுமே அப்போது பயன்படுத்தப்படும். அப்போது 3 பவர் பிளே ஓவர்கள் கிடையாது.

ஆனால் இன்று பேட்ஸ்மென்களுக்கு ‍பல சாதகங்கள் உள்ளன. கோலி மிகவும் சிறப்பான வீரர் என்பதையும் நான் மறுக்கவில்லை. அவர் அதிக சாதனைகளை செய்துள்ளார். அதேசமயம், அன்றைய சூழல்களை ஒப்பிட்டு, சச்சினை நான் சிறந்த ஒருநாள் வீரராக தேர்வுசெய்கிறேன்” என்றுள்ளார் கவுதம் கம்பீர்.